செவ்வாய், 27 அக்டோபர், 2015

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு - மதுரை ஐகோர்ட்டில் 2 பேர் வழக்கு

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐகோர்ட்டு இறுதிக்கெடு விதித்துள்ளது. இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக், பெரியசாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார். எதுசம்பந்தமான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டால் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். விசாரணைக்காக எங்களுக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது.
எனவே, விசாரணை என்ற பெயரில் எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 16–ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: