சனி, 31 அக்டோபர், 2015

ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை மீட்க திமுக வழக்கறிஞர்களை நியமிக்கிறது!

சென்னை: ஆந்திரா சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தி.மு.க. வழக்கறிஞர்கள் உடனே ஈடுபடுட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
 கேள்வி : ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலையைத் தொடர்ந்து மேலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருப்பதாக அவர்களின் உற்றார் உறவினர்கள், "நமக்கு நாமே" பயணம் மேற்கொண்டுள்ள கழகப் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலினைப் பார்த்து கதறியிருக்கிறார்களே? 
  பதில் : "கேள்வி - பதில்" பகுதியில் இதைப் பற்றி நான் ஏற்கனவே விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆந்திராவில் இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசிலே இருப்போர், ஆந்திர முதல்வருக்கு இது குறித்து ஒரு கடிதத்தை எழுதியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலக் காவல் துறையினரோ தாங்கள் செய்த பெருந்தவறை மறைக்க அனைத்து வகை களிலும் முயற்சி மேற்கொண்டுள்ளார்களாம்! உண்மையை வெளிக் கொண்டுவரும் நோக்கில்; தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீதும், அத்துமீறி நுழைந்ததாக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, "கொல்லப்பட்ட தொழிலாளர்கள் எல்லாம் செம்மரக் கடத்தல்காரர்கள்" என்று சிறையிலே இருந்த ஒருவரை கூறும்படி காவல் துறையினரே தூண்டிவிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நெல்லூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 63 தமிழர்களையும், கடப்பா மாவட்டத்தில் 43 தமிழர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அந்தத் தமிழர்கள் எல்லாம் பல மாதங்களாக எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்கத் தமிழக அரசின் சார்பில் எந்தவிதமான முயற்சியும் எடுக்காத நிலையில், கழக வழக்கறிஞர்கள் இதிலே தலையிட்டு ஆந்திராவில் சிறையிலே இருக்கின்ற தமிழர்களை மீட்பதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டும். 
விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு 
 கேள்வி : தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் உங்களைச் சந்தித்தது பற்றி? பதில் : என்னை மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, காவிரியில் இந்த ஆண்டு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை உடனடியாகப் பெற்று வழங்கிடவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மேலும் தாமதமின்றி அமைத்திடவும், ராசி மணல் மேகதாது அணை கட்டுமானப் பணி யினைத் தடுத்து நிறுத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி 4-11-2015 அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விருப்பதாகவும், அதற்கு தி.மு. கழகத்தின் ஆதர வினைத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். தமிழக விவசாயிகளின் நேர்மையான, முறையான அனைத்துப் போராட்டங்களுக்கும் தி.மு. கழகத்தின் ஆதரவு என்றைக்கும் உண்டு என்று அவர்களிடம் நான் உறுதியளித்திருக்கிறேன். 
தேசியக் கொடி கேள்வி : தலைமைச் செயலகத்தில் அன்றாடம் பறக்கவிடும் தேசியக் கொடி கிழிந்து தொங்குகிற புகைப்படம் நாளேடுகளில் வந்துள்ளதே? பதில் : தேசியக் கொடியின் மரியாதை யையும், கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும். தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி கிழிந்து தொங்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரும் இல்லை. அமைச்சர்களும் இல்லை. தலைமைச் செயலாளரும் முதல்வருடன் கலந்து பேசிட கோடநாடு சென்று விட்டார். யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அ.தி.மு.க. அரசு பயன்படுத்த மறுத்தபோது, நாமக்கல் மாளிகையிலே உள்ள பல்வேறு துறைகளின் கோப்புகளை புதிய தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் செல்ல நேரமும் பொருளும் விரயமாகும் என்றெல்லாம் காரணம் கூறப்பட்டது. தற்போது கோடநாட்டிற்கு கோப்புகளும், அதிகாரிகளும் சென்று வர நேரமும், நிதியும் விரயமாகவில்லையா? இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

Read more at: tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: