போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்மோடி அரசின் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015: நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கார்ப்பரேட் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் எடுபிடியான மோடி அரசு, சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா (2015)-ஐ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது. பொதுப்போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதையும் நீக்கி, மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்த பட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும் போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் இந்த சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் இந்த மசோதாவை முறியடிக்க உடனடியாக வீதியில் இறங்கி போராடுவதும் அவசர அவசியக் கடமையாக உள்ளது. எவ்வளவு வேகமாக மீண்டும் கும்பனி ஆட்சி இந்தியாவில் காலூன்ருகிறது? 

ஓட்டுனர்களை ஒழித்துக் கட்டும் சட்டம் :
தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.
இந்த சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா,  கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஓட்டுனர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
  • கார், லாரி, மினிடோர், டெம்போ, டாக்ஸி போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வரை எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
  • புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இருப்பவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். அதன் பின்னர் 3 மாதங்கள் சோதனை காலம். அதன் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
  • சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை. எடுத்துக்காட்டாக:
  1. ஒருமுறை சாலைவிதியை மீறியதாக குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித்தாளில், “நான் தவறு செய்தவன்” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
  2. சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  3. இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.
  • தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அதாவது ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது. எப்படி?
  • இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மட்டுமல்ல ஓட்டுனர் உரிமத்தையும் அவர்கள் தான் வழங்குவார்கள்.
திருடன் கையில் சாவி!
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதித்து (எப்.சி. – Fitness Certificate)-ஐ கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள்
வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதிப்பது (எப்.சி. – Fitness Certificate) தற்போது ஆர்.டி.ஓ. அலுலகங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இனி இதுவும் ஒழிக்கப்படும். அதனை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனகங்ளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி. பார்ப்பது என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வாகனங்களுக்கான பதிவையும் (Registration) இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டு கட்டுப்பாடுகள் மூலம் ஒரு வண்டியை தகுதியற்ற வண்டி என்று சொல்லி புதிய வண்டிகளை வாங்க நிர்ப்பந்திக்க முடியும்.
உதிரி பாகங்கள் விற்பனையிலும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
ஓடும் நிலையில் உள்ள வண்டிகள் என்பதற்கான வரையறையும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர், தான் வைத்துள்ள வண்டிகள் ஓடும் நிலையில் இருக்க வேண்டும் என்றால் ஒரிஜினல் உதிரி பாகங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது. இதன் மூலம், ஒரு கம்பெனி தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும். மேலும், உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும் ஒழித்துக் கட்ட முடியும்.
போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம்
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவது இதன் நோக்கம்.
வாகனங்களில் பழுது நீக்கும் வேலையான (சர்வீஸ் ஒர்க்) என்பது தனியொரு தொழில் அல்ல. பெயின்டிங், வெல்டிங், ரப்பிங், பாலிசிங், கிரீசிங் என்று நூற்றுக்கணக்கான வேலைகளை உள்ளடக்கியது. முக்கியமாக பழைய பாகங்களை புதுப்பித்து பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சர்வீஸ் தொழிலை தற்போது வாகன உரிமையாளர்கள் என்ற வகையில் நமது விருப்பப்படி உள்ளூர் பட்டறைகளில், சாலை ஓரக் கடைகளில் செய்து வருகிறோம். இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
மொத்தத்தில், நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவதுதான் இதன் நோக்கமாக உள்ளது.
ஆணையங்களின் வழியே கார்ப்பரேட்டுகளில் அதிகாரம்!!
தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாடு முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேருந்துகள் நாள் தோறும் மக்களை சுமந்து செல்கின்றன. இனி இந்த வண்டிகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் அந்த பேருந்துகளுக்கு மறு பர்மிட் வழங்கப்படாது. அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இனி இயங்காது. அவை முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்த பர்மிட்களை இனி அரசின் மூலம் வழங்குவதும் நிறுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு ஆணையம் தேசிய அளவில் அமைக்கப்பட இருக்கிறது. அந்த ஆணையத்தின் பெயர், நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority). இந்த ஆணையம் எல்லா வழித்தடங் களையும் ஏலத்தில் விடும். இந்த ஏலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கலாம்.
அந்த வகையில், நம்மூர் அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை ஒழித்துக் கட்டி பன்னாட்டுக் கம்பெனிகளின் பேருந்துகள் மட்டும்தான் ஓடப்போகின்றன. இது மட்டுமல்ல, அதிக விலைக்கு ஏலம் எடுக்கும் கம்பெனிக்குதான் ரூட் பர்மிட் வழங்கப்படும். அந்தக் கம்பெனி அந்த வழித்தடத்தில் செல்வதற்கான பேருந்து கட்டணத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும்!
அதனால், இலாபம் தரும் வழித்தடங்களில் (ரூட்களில்) மட்டும்தான் பேருந்துகளை இனி பார்க்கமுடியும். கிராமங்களுக்கான பேருந்துகள் ஒழிக்கப்படும்!
கார்ப்பரேட்டுகளின் சர்வாதிகாரம் – சட்டபூர்வ பாசிசம்!
விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான மக்களால் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஒன்றான ஆட்டோ மொபைல் தொழில், போக்குவரத்துத் தொழில் அதனை சார்ந்த சிறு, குறு முதலாளிகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட இருக்கிறது. மற்றொருபுறம், மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நடமாடும் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. இது இந்த துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
நில அபகரிப்புச் சட்டம், தொழிலாளர் துறை திருத்தச் சட்டம், சிறு–குறுந்தொழில்களை ஒழிக்கும் பல சட்டங்கள், இரயில்வே தனியார்மயம், பொதுத்துறைகள் தனியார்மயம், கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க இருந்த தடைகள் எல்லாம் நீக்கம், பி.எப். தனியார்மயம், இன்சூரன்ஸ் முழுவதும் தனியார்மயமாக்கம், வங்கிகள் தனியார்மயம் என்று ஒட்டுமொத்த நாடே கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கான களமாக மாற்றப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, பாசிசத்தை சட்டபூர்வமாக அரங்கேற்றுகிறது மோடி அரசு.
தேச வளர்ச்சி என்று கூறி மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளை தட்டிக்கேட்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பறிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், பண ஆதாயம், பொது நலம், இலாப நோக்கம், வறுமை, பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்க்கேடு, ஏழைகள், பணி நிரந்தரம், மருத்துவ உதவி, சிறு தொழில்கள், தேச முன்னேற்றம், அச்சுறுத்தல், நாட்டுப் பற்று, சட்ட மீறல், தேச வளர்ச்சிக்கு எதிரான குற்றம் என எல்லாவற்றிற்கான வரையறைகளையும் மாற்றி இந்தியாவை ஒரு திறந்தவெளி சிறைச்சலையாக மாற்றி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதிதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015.
இதற்கு காரணம் என்ன?
ஜனநாயகம் என்ற பெயரில் இதுகாறும் கடைப்பிடித்து வந்த ஏட்டளவிலான உரிமைகளை ஏன் ஒழிக்கிறார்கள்?
இந்த நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள் தேச முன்னேற்றத்தை கொண்டுவருவோம் என்று 1947 முதல் கூறி வந்தனர். ஆனால், இவர்கள் மேற்கொண்ட எந்த சீர்த்திருத்தங்களும் தேசத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, மீள முடியாத கடும் நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.
1992–ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளை அமுல்படுத்தியதன் விளைவாக, இன்று நாடே திவாலாகும் நிலையை எட்டிவிட்டது. நாட்டில் அநீதிகள் பெருகி, ஏற்கனவே சொல்லப்பட்ட கடமைகள், உரிமைகள், நியாயங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில், இந்த நாட்டை ஆளும் வர்க்கங்கள், மக்களுக்கு வாழ்வளித்து காக்க இலாயக்கற்றதாகிவிட்டன. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சர்வாதிகாரம் நேரடியாக ஆதிக்கம் புரிய வேகமாக வந்து கொண்டிருக்கிறது. போலி ஜனநாயகக் கட்டமைப்புகள் இடிந்து நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன.
மக்களுக்கு உதவாத செயலிழந்துபோன இந்த சட்டம், நீதியை நம்பிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு.
எங்கள் ஊரில் மணல் கொள்ளை அடிக்கக் கூடாது, எங்கள் ஊரில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கக் கூடாது, எங்கள் ஊரில் மீத்தேன் எடுக்கக் கூடாது, காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று நாடெங்கும் மக்கள் போர்க்கோலம் பூண்டு முன்னேறி வருகிறார்கள். எந்த ஓட்டுக் கட்சியையும் நம்புவதற்கு இனியும் மக்கள் தயாராக இல்லை.
பாலியல் குற்றவாளிகளை வீதியிலேயே தண்டிக்கும் முன்னுதாரணமிக்க போராட்டங்கள் ஆங்காங்கே தொடங்கிவிட்டன. பல்வேறு இடங்களில் எமது தோழமை அமைப்புகளின் தலைமையில் மக்கள் போராடி வருகின்றனர். இந்த திசையில் மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம்! சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை முறியடிப்போம்!
உழைக்கும் மக்களே!
  • இச்சட்டப்படி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது,, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் – உதிரி பாகங்கள் விற்பனை – இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
  • அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஒழித்துக்கட்டி எல்லா வழித்தடங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும்!
  • போக்குவரத்துக் கட்டணத்தை அவைதான் தீர்மானிக்கும்!
  • ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் என பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்குவதுதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா!
  • கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கு வழிவகுக்கும் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை முறியடிப்போம்!
  • ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
  • மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
30-04-2015 அன்று நாடெங்கும் போக்குவரத்து துறை சார்ந்த தொழிலாளர்கள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வோம்!
modi-makes-transport-corporate-property-poster
[நோட்டீசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784
ஆட்டோ, லாரி, பேருந்து படங்கள் – இணையத்திலிருந்து