நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் தாக்கமாக,
இந்தியாவின் சில பகுதிகள் 10 அடி நகர்ந்துள்ளதாக சர்வதேச புவியியல்
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம்
ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம்,
மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம்
உணரப்பட்டது.
இந்தப் பேரிடரின் கோரதாண்டவத்துக்கு நேபாளத்தில் சுமார்
5,000 பேரும், இந்தியாவில் 72 பேரும் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கமானது கடந்த 81 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமானதாகும்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா, நேபாளத்தின் கீழுள்ள
பூமித் தட்டுகள் சில மீட்டர்களுக்கு நகர்ந்துள்ளதாக புவியியல்
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் காலின்
ஸ்டார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேபாளத்தில் எதிர்பாராமல் நேர்ந்த
நிலநடுக்கமானது மிகப் பெரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக
காத்மாண்டு, போகாரியா உள்ளிட்ட பகுதிகளின் கீழே உள்ள பூமித் தட்டு
ஒருபுறமாக நகர்ந்துள்ளன.
அதேபோல, வட இந்தியாவின் சில பகுதிகள் ஒரு அடியிலிருந்து
10 அடி வரை வடக்குப்புறமாக நகர்ந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். பூமித்
தட்டுகள் இடம்பெயர்வதை புவியியல் வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து
வருவதாகவும், நேபாளம்-திபெத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கீழே உள்ள பூமித்
தட்டானது ஆண்டுக்கு 1.8 அங்குலம் வீதம் நகர்ந்து வருவதாகவும் தனியார்
தொலைக்காட்சி வலைதளம் ஒன்றில் ஸ்டார்க் ஏற்கெனவே கட்டுரை வெளியிட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பில்லை: இதனிடையே,
நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்படவில்லை
என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
நிலநடுக்கத்தால், நேபாளத் தலைநகர் காத்மாண்டு 3 அடிகள் தெற்குப்புறமாக
நகர்ந்துள்ளது. அதேபோல எவெரஸ்ட் சிகரத்தின் மேற்கு பகுதியிலும்
பூமித்தட்டுகள் இடம்பெயர்ந்துள்ளன. இருப்பினும், இதன் காரணமாக எவரெஸ்ட்
சிகரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் உயரமும் மாறவில்லை என்று
அவர்கள் தெரிவித்தனர். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக