வெள்ளி, 1 மே, 2015

மேயர் சைதை துரைசாமியின் ஜெயலலிதா அஷ்டோத்தர சதநாமாவளி ! ஆடுவதும் பாடுவதும் காசுக்கு நாம ......


சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்வது என்பது ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்திருக்கும் குணநலன். ஆட்சியில் இருக்கும்போதும் சரி, அதிகாரம் கையில் இல்லாத போதும் சரி, கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, மக்களுக்கு உதவிகள் செய்திடும் மாசில்லாத் தங்கம் அவர். 8-வது வள்ளல் என பெயர் எடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசாய் அரசியலில் மட்டுமல்ல, வரையாது வழங்கும் வள்ளல் தன்மையிலும் குறையாது விளங்கும் குலவிளக்கு அவர்.  வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வள்ளலாரை போல வாடினாராம் மக்களின் முதல்வர் ம்ம்ம்ம் ஒருத்தரையும்   விட்டு  வைக்க  மாட்டாய்ங்க 
‘கொடை என்பது, உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில், ஒரு கணம் கூட தாமதியாது அடுத்த நிமிடமே செய்துவிட வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார்.

‘என்னுடைய வாழ்நாளுக்குப் பிறகு கொடை அளிப்பேன்’ என்று சொல்லுவது எல்லாம் கொடை ஆகாது. கொடை என்றால் அந்த கணமே கொடுத்துவிட வேண்டும்.

இந்தியத் திருநாட்டை போர் மேகம் சூழ்ந்துவிட்டது இதனை எதிர்கொள்ள நிதி வழங்குங்கள் என்று பாரதப் பிரதமர் கேட்ட அடுத்த நொடியே, ஜெயலலிதா தான் அணிந்திருந்த தங்க நகைகள் அத்தனையும் தயக்கம் என்பது சிறிதும் இன்றி தாமதம் என்ற பேச்சுக்கும் இடமின்றி அந்த நிமிடமே பாரத பிரதமரிடம் வழங்கினார்.

தனது முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசின் துறை மூலமாகவும், ஆட்சியில் இல்லாத போது அ.தி.மு.க.வின் சார்பிலும் ஆக அத்தனை செலவுகளையும் தாமே ஏற்று மணமக்களின் வீட்டாருக்கு ஒரு பைசா செலவின்றி, தங்கத் தாலியுடன் தாய் வீட்டு சீதனமாய் குடும்பம் நடத்த தேவையான அத்தனை பொருட்களும் வழங்கி பல்லாயிரக்கணக்கான திருமணங்களை நடத்திக் கொடுத்த கொடை வள்ளல் அவர்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாரைப் போல, துயர்படும் மக்களைப் பார்த்த போதெல்லாம் வாடிய அவர், ஏழை-எளிய மக்களின் வாட்டத்தைப் போக்கி ஏற்றத்தைத் தந்திட எண்ணிலா திட்டங்கள் தந்தார்.

அரிசி சோறு பொங்கி சாப்பிட முடியாதா? என தவித்த மக்களின் தலை விதியை மாற்ற விலையில்லா அரிசித் திட்டம் தந்தார். அம்மி அரைத்தும், ஆட்டு கல் சுற்றியும் காலமெல்லாம் வதைபடுவதுதான் எங்கள் விதியா? என நொந்த இல்லத்தரசிகளை காப்பாற்ற விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தந்தார். நாலு ஆடு இருந்தால் அதை வைத்து என் குடும்பத்தை சமாளித்துக் கொள்வேனே என்று எண்ணிய பெண்களின் மனம் போல நான்கு ஆடுகள் தந்தார்.

பால் கறந்து பிழைத்துக் கொள்வேன் என்று உரைத்தவர் நலம் பெற கறவை மாடு தந்தார். தங்கத்தில் தாலி செய்ய வகை அற்றோமே என்று வாடிய ஏழைப் பெண்களின் முகங்களில் நிரந்தரமாய் புன்னகை குடி கொள்ள தாலிக்கு 4 கிராம் தங்கமும், திருமணச் செலவுகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை திருமண உதவி நிதி உதவியும் தந்தார்.

வீடில்லா ஏழைகளுக்குப் பசுமை வீடும், ஏழை மக்களும் உயர் மருத்துவ சிகிச்சை பெற விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் வழங்கினார். அறிவுச்சுடர் ஏற்ற வகையில்லையே என்று ஏங்கிய மாணவச் செல்வங்களின் ஏக்கம் போக்க மடிக்கணினி தந்தார்.

பள்ளி சென்று வர வசதி செய்து நேரத்தில் வீடு திரும்ப விலையில்லா மிதி வண்டி தந்தார். அதுமட்டுமல்ல பார் வியக்க பண்ணைப் பசுமைக் கடைகள் தந்தார். அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் என்று அடுக்கடுக்காய்த் திட்டங்கள் பல தந்தார். இப்படி மக்கள் நலம் காக்க மகத்தான திட்டங்களை அள்ளித் தந்த வள்ளல்.

மக்கள் நலன் ஒன்றையே சிந்தித்து வாழும் மக்கள் தலைவரை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் இட்டுக்கட்டிய புனைந்துரைகள் வீழ்த்தி விடாது. வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை.

இது நான்குமறை தீர்ப்பு. தர்மம் செய்து வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. கொடை கொடுத்து வாழ்ந்தவர்களை யாரும் வீழ்த்தியதாய் வரலாறும் இல்லை. தர்மத்தின் வழி நடக்கும் ஜெயலலிதாவை தர்மம் தலை காக்கும். இது நிச்சயம். தர்மத்தின் துணையோடு ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராய் அரியணை அமர்ந்து நம்மை வழிநடத்துவார் இது சத்தியம்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: