டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை
எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு
வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது
என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில்
மேல்முறையீட்டு மனு மீது விசாரணை முடிந்துவிட்டதால் அதில் மறுவிசாரணை தேவை
இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பவானிசிங்
நியமனம் விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
விதித்து பெங்களூர் பரப்பன அக்ராஹா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு
வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டிருந்தது.
Jaya's DA case: Bhawani Singh appointment not acceptable- Says SC
ஆனால் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது தவறு; அவர்
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்றும் கூறி
தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் முதலில் கர்நாடகா
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி
பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது
மனு நீதிபதிகள் எம்.பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு
விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் இருவரும் வேறுபட்ட தீர்ப்பை கடந்த 15-ந் தேதி
வழங்கினர். அதில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை
என்று பானுமதியும், பவானி சிங் நியமனம் தவறு என்று லோகூரும் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை
நீதிபதி ஹெச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர். அதன்படி இந்த வழக்கு
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த்
ஆகியோர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கடந்த 21-ந் தேதி கூறுகையில்,
மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு
நியமித்தது சரியல்ல. அதே நேரத்தில் விசாரணை முடிந்துவிட்டதால் இந்த
வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஏப்ரல்
27-ந் தேதி வழங்கப்படும் என்றனர்.
அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச்
அளித்த தீர்ப்பு விவரம்:
ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு
வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது செல்லாது; இது விஷத்தைப் பாய்ச்சும்
செயல்.
இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடகா அரசுக்குத்தான்
அதிகாரம் உண்டு.
அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்துவிட்டதால்
அதில் மறுவிசாரணை தேவை இல்லை.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பவானிசிங் எழுத்துப்பூர்வமாக
தாக்கல் செய்த வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது.
கர்நாடகா அரசு மற்றும் க. அன்பழகன் தரப்புகள் எழுத்துப் பூர்வமாக
வாதங்களைத் தாக்கல் செய்யலாம்.
நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் கர்நாடகா அரசு மற்றும்
க. அன்பழகன் தரப்பு வாதங்களையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொண்டு
தீர்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Read more /tamil.oneindia.com
Read more /tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக