வியாழன், 30 மே, 2013

FEFSI பெப்சி உடைந்தது ராதிகா தலைமையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் உதயம்

Radhika Sarathkumar, the head of the Small Screen Artistes' Association, announced that it is moving out of the FEFSI. The flash strike for nearly two days which crippled film shooting in Tamil Nadu came to an end on Wednesday evening.தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பில் (பெப்சி) இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகி கொள்கிறது. இனி சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்கி தனித்து இயங்குவோம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் நேற்று காலை நடந்தது. சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பெப்சி தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில், பெப்சி அமைப்பில் இதுவரை இணைந்து செயல்பட்ட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம், இனி பெப்சி அமைப்பில் இருந்து விலகி கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியில், "கடந்த 2 நாட்களாக பெப்சி அமைப்பு தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னறிவிப்பு எதுவும் இன்றி சின்னத்திரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டார்கள். சீரியல் தயாரிப்பது என்பது தினசரி பத்திரிகை நடத்துவது மாதிரி. தினமும் படப்பிடிப்பு நடத்தி சேனலில் ‘டேப்' கொடுத்தால்தான் சீரியல்களின் ஒளிபரப்பு தடையில்லாமல் தொடரும்.
இப்படி திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களால் சேனலுக்கு குறித்த நேரத்தில் டேப்பை கொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அதனால் சேனலுக்கு தயாரிப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே இந்த மாதிரியான நிலைமை இனியும் தொடராமல் இருக்க சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்குவது குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதற்கான ஆக்கபூர்வ வேலைகள் தொடங்கவிருக்கிறது. இந்த முடிவில் எங்களோடு சின்னத்திரையின் இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம், அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கமும் கைகோர்த்திருக்கிறது. இது திடீர் முடிவு அல்ல. இந்த முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. திடீர் திடீரென பெப்சியால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது தயாரிப்பாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது நான் தயாரித்து வரும் ‘வாணி ராணி' தொடருக்கு நாளைக்கு கொடுக்க என்னிடம் ‘டேப்' கிடையாது. பெரிய தயாரிப்பாளரான என் போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால், சிறிய தயாரிப்பாளர்களின் நிலை என்ன? தொடர்களில் பணியாற்றுகிறவர்களின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிக்கப்படத்தானே செய்யும். கடந்த 19-ந்தேதியும் இதுமாதிரி திடீரென படப்பிடிப்பை நிறுத்த சொன்னார்கள். இப்படி அடிக்கடி படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களுக்கு ஏற்படும் சிக்கலை பெப்சி தலைவரிடம் நானே ஒரு முறை போனில் பேசி தெரிவித்தேன். கடிதம் அனுப்பியும் எங்கள் நிலையை விளக்கினோம். ஆனாலும் ஸ்டிரைக் தொடரவே செய்கிறது. இதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ் சின்னத்திரைக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி கொண்டு அதில் எல்லாரும் இணைந்து வேலை செய்யவிருக்கிறோம். இதற்காக 7 கமிட்டி ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்து செயல்படுத்த இருக்கிறோம். ஏற்கனவே கர்நாடகம், கேரளா, ஆந்திராவிலும் இம்மாதிரி சின்னத்திரைக்கென தனி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒரே நேரத்தில் பல்வேறு சேனல்களுக்குமாக 38 சீரியல்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒவ்வொரு சீரியலிலும் சுமார் 200 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தனை பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்," என்றார். மேலும் அவர் கூறுகையில், "இது முடிந்த முடிவு. எங்களால் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் போகமாட்டோம்,'' என்றார். முன்னதாக நிறைவேறிய பொதுக்குழு தீர்மானத்தில், பெப்சியில் இருந்து விலகல் தீர்மானத்தை தொடர்ந்து, மொழிமாற்ற தொடர்கள் சில சேனல்களில் ஒளிபரப்பாகி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எப்படியோ, தயாரிப்பாளர்கள் தங்களின் பெரும் வில்லனாகப் பார்க்கும் பெப்சியை உடைப்பதற்கான முதல் அடியை நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் எடுத்து வைத்துள்ளார் என்பதுதான் கோடம்பாக்க டாக்!   பெப்சி உடைந்தது ராதிகா தலைமையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் உதயம் 
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: