திங்கள், 27 மே, 2013

சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட காங். தலைவர், மகன் கொடூர கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களால் கடத்திச் செல்லப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காட்டில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்பட 32 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.நக்சல்கள் பிரச்னை தலைவிரித்தாடும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காகவும் நக்சல் தீவிரவாதத்தை எதிர்த்தும் காங்கிரஸ் சார்பில் பரிவர்த்தன் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


பஸ்தார் மாவட்டம் ஜக்தல்பூர் அருகே நேற்று மாலை காங்கிரஸ் பேரணி நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா, மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்எல்ஏ உதய முதலியார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். பேரணி முடிந்ததும் அவர்கள் கார்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்தபோது, திடீரென 250க்கும் அதிகமான நக்சல்கள் பயங்கர ஆயுதங்களுடன் கார்களை வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். காங்கிரஸ் தலைவர்களுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார் திருப்பி சுட்டபோதும் நக்சல்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. குண்டுகள் பாய்ந்து காங்கிரஸ் தலைவர்களும் போலீசாரும் சுருண்டு விழுந்தனர். சிறிது நேர சண்டைக்கு பிறகு நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த பயங்கர தாக்குதலில் மாநில முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா, உதய முதலியார் உள்பட 17 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா, 20 போலீசார் உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர். சுக்லா உடலில் பல குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் ஜக்தல்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமாரும் அவரது மகன் தினேஷும் சம்பவ இடத்தில் இருந்து காணாமல் போயினர். அவர்களை நக்சல்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை தர்பாகட் காட்டுப் பகுதியில் இருவரும் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்கள் சிதைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரும் இன்று சட்டீஸ்கருக்கு சென்று தாக்குதலில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ராய்ப்பூர் சென்று, தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதலில் ஈடுபட்ட நக்சல்களை பிடிக்க பஸ்தார் காட்டு பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீசார் 600 பேர் சட்டீஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பந்த்துக்கு அழைப்பு:

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ. அரசு உரிய பாதுகாப்பு தரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ. அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, சட்டீஸ்கரில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

3 குண்டுகளை அகற்ற சுக்லாவுக்கு ஆபரேஷன்:

நக்சல் தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா (84) படுகாயமடைந்தார். அவரது உடலில் 3 குண்டுகள் துளைத்துள்ளன. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர், ஜக்தல்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 குண்டுகளை அகற்ற அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சுக்லா டெல்லி அருகே உள்ள குர்கானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேதண்டா மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சட்டீஸ்கர் காங்கிரஸ் மீடியா ஒருங்கிணைப்பாளர் விகாஸ் விஜய் பஜாஜ் தெரிவித்தார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: