புதன், 29 மே, 2013

மெக்கானிக்கலுக்கு ஏன் டிமாண்ட்? IT Sector ஆட்டம் காணுகிறதா?

இந்த வருடத்திற்கான டிமாண்ட் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பெரிய கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடத்திற்கு இருபது இலட்சம் வரைக்கும் கேட்கிறார்கள். மற்ற பாடங்களுக்கு அதைவிட குறைவான தொகையை டொனேஷனாகக் கொடுத்தால் போதும். சுமாரான கல்லூரிகளில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்க்கு ஏழு லட்சம் என்றால் மற்ற பாடங்களுக்கு ஐந்துதான். ஆக பெரிய கல்லூரியாக இருந்தாலும் சரி, டம்மியான கல்லூரியாக இருந்தாலும் மெக்கானிக்கலுக்குத்தான் டிமாண்ட்.
கல்லூரிகள் எப்படி டிமாண்டை நிர்ணயம் செய்கின்றன?
எல்லாம் நம் மக்களின் கைங்கரியம்தான். ரிசல்ட் வந்தும் வராமலும் ‘சார் மெக்கானிக்கலுக்கு எவ்வளவு டொனேஷன்?’ என்று கேட்டு விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எந்த பாடத்தை அதிகம் பேர் கேட்கிறார்களோ அந்தப்பாடத்திற்கான ‘ரேட்’டை அதிகமாக்கிவிடுகிறார்கள். மற்றபடி இந்த ‘ரேட் பிக்‌ஷிங்’கில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதை வைத்து ஒரு பாடத்திட்டம் சூப்பராக இருக்கிறது என்றும் இன்னொரு பாடத்திட்டம் பல்டியடித்துவிட்டது என்றும் முடிவு செய்ய வேண்டியதில்லை. nisaptham.com
இந்த வருடம் மெக்கானிக்கலுக்கு ஏன் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது?
காரணம் ரொம்ப சிம்பிள். சென்ற ஆண்டு ஐடி நிறுவனங்கள் கொஞ்சம் ஆட்டம் கண்டன. கேம்பஸ் இண்டர்வியூக்களில் வேலைக்கு எடுத்திருந்தவர்களை பணிக்கு அழைப்பதற்கு மிகவும் கால தாமதப்படுத்தின. அதனால் ஐ.டி துறை காலியாகிவிட்டது போன்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆகவே ஐடி துறையயை மாணவர்கள் தவிர்க்கிறார்கள். ஐடியை விடுத்தால் இந்தியாவில் மெக்கானிக்கலுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருப்பதால் இந்த வருடம் அதன் மீது கண் வைக்கிறார்கள்.
உண்மையிலேயே ஐடி துறை ‘டல்’லடிக்கிறதா?
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஐடியை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் ஒன்று புரியும். ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இப்படியான Slowdown வருகிறது. ‘கப்பல் கவிழ்ந்துவிடும்’ போன்றதான மாயை உருவாக்கிவிட்டு அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ‘பிக் அப்’ ஆகிவிடும். கடந்த ஆண்டிலில் உருவான Slow downம் இத்தகைய தற்காலிகமான ஒன்றுதான். அதனால் ஐடி டல்லடிக்கிறது என்ற பயத்தை முழுமையாக நம்ப வேண்டியதில்லை.
அப்படியானால் மெக்கானிக்கல் துறையை நாட வேண்டியதில்லையா?
ச்சே.ச்சே. அப்படியெல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் தைரியமாக அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் எல்லோரும் அதனுள் விழுகிறார்கள் என்று குருட்டுவாக்கில் அதில் விழ வேண்டாம். இப்பொழுது கல்லூரியில் சேர்பவர்கள் படித்து முடிக்க இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன. அதற்குள் ஐடி ‘பிக் அப்’ ஆகியிருக்கும். அப்பொழுது பாருங்கள். இந்த வருடம் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்தவர்களில் முக்கால்வாசிப்பேர் ஐடியில்தான் வேலைக்குச் சேர்வார்கள். அதனால் ஐடியோ/கம்ப்யூட்டர் சயின்ஸோ படிப்பதாக விருப்பமிருந்தால் தயக்கமில்லாமல் தேர்ந்தெடுங்கள்.
இந்த ‘மெக்கானிக்கல் அலையை’ எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்?
எல்லோரும் மெக்கானிக்கலுக்கு போகிறார்கள் என்று பயப்படாமல் வேறு பாடத்தை தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.  உதாரணமாக ஒரு மாணவரின் கட்-ஆஃப் 185 வைத்துக் கொள்வோம். மெக்கானிக்கல் அலையின் காரணமாக அவருக்கு நல்ல கல்லூரியில் அந்தப்பாடம் கிடைக்க வாய்ப்பில்லை. ‘மெக்கானிக்கல்தான் வேண்டும்’ என்று அவர் நினைத்தால் ஏதேனும் சுமாரான கல்லூரியில்தான் சேர வேண்டும். அதுவே மற்ற பாடங்களுக்கு போட்டி குறைவு என்பதால் அவை நல்ல கல்லூரிகளில் சீண்டப்படாமல் கிடப்பதற்கு வாய்ப்பு என்பதால் அதை பொறுக்கி எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான காரியம்.

கருத்துகள் இல்லை: