வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம், பாஜக ஆட்சிக்காலத்தில் தொலைத் தொடர்புத்துறையைக் கவனித்து வந்த அருண் ஷோரி மற்றும் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புயைக் கவனித்தவரான அருண் ஷோரி மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தவிரும்புவதாக அது தெரிவித்துள்ளது.

ஏர் செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி மாறன் மிரட்டினார். அதைத் தொடர்ந்து மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் வந்த பின்னர் அதி வேகமாக அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கினார் என்பது குற்றச்சாட்டு. இதன் பேரில்தான் தயாநிதி மாறன் பதவி விலகினார்.

இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் முன்பு சிபிஐ கூறியிருந்தது. ஆனால் தற்போது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ ஆதாரம் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்துதான் தயாநிதி மாறனை கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்தது காங்கிரஸ் கட்சி என்பது நினைவிருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இதுவரை 2 குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய 9 நிறுவனங்களில் தற்போது எஸ்ஸார் குழுமம் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் சிபிஐ கூறியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட லூப் நிறுவனம்தான் 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: