கடலூர்: தி.மு.க., வினரை பொய் வழக்குகளில் கைது செய்து வருவது மட்டுமே, அ.தி.மு.க., அரசின் 100 நாள் சாதனையாக உள்ளது, என மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
நில அபகரிப்பு வழக்கில் கைதாகி, கடலூர் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி உள்ளிட்டோரைச் சந்திக்க, மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன், மதுரை துணை மேயர் மன்னன் ஆகியோர், நேற்று காலை, கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.சிறை விதிப்படி, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே, விசாரணைக் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க முடியும் என்பதால், முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோரை சந்திக்க, மத்திய அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து, மதுரை நில அபகரிப்பு வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை மாநகர மூன்றாம் பகுதிச் செயலர் ஒச்சு பாலுவை சந்தித்துப் பேசினர்.சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது :
தி.மு.க., வினரை பொய் வழக்குகளில் கைது செய்து வருவது மட்டுமே, அ.தி.மு.க., அரசின் 100 நாள் சாதனையாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 150 நாள் சாதனையும் இதுதான். உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டே, நில மோசடி உள்ளிட்ட பொய் வழக்குகளில், தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதை, நாங்கள் சட்டப்படி சந்தித்து வருகிறோம். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நான் ஏற்கனவே கூறியது நடக்கும்.ராஜிவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்வி குறித்து, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக