வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அந்தமான் முரசு தீவுகளின் முதல் தமிழ் செய்தி 43 வது ஆண்டு விழா

அந்தமான் முரசு

அந்தமான் நிகோபார் தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏடான ”அந்தமான் முரசு” தனது 43 வது ஆண்டு விழாவைக் கடந்த 30.08.11 அன்று கொண்டாடியது. தினசரி செய்தி ஏடாக வெளிவந்த ”அந்தமான் முரசு” நிர்வாகக் காரணங்களால் வார இதழாக மாற்றம் பெற்றது. இந்த அந்தமான் முரசு செய்தி ஏடு தெய்வத்திரு. சுப. சுப்ரமணியன் அவர்களால் தொடங்கப்பெற்று தற்போது அவரது திருமகனார் திரு. சுப. கரிகால்வளவன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தெய்வத்திரு சுப. சுப்பிரமணியன் அவர்கள் தீவுகளில் தமிழர் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் தம் உரிமைகளை மீட்டெடுக்கவும் போராட்டங்கள் பல புரிந்தவர். இன்று தீவுகளில் தமிழர்கள் உன்னத நிலையில் இருப்பதற்கும், வாணிபம், அரசுப்பணிகளில் வெற்றியுடன் உலாவருவதற்கும் துணை புரிந்த பெருமக்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.தந்தை விட்டுச்சென்ற பணியினை தமையன் செவ்வனே செய்துவருகிறார். தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார். தீவுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3,79,000. இவர்களில் தமிழர்கள் சுமார் 1,00,000 பேர். மொத்தத்தமிழர்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இந்த செய்தித்தாளை அந்தமான் முரசு ஆசிரியர் திறம்பட செயல் படுத்த இயலும். மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு தமிழ் வழிக்கல்வி இருக்கிறது. முக்கிய பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவில் தமிழர்கள் இந்தியர் என்ற உணர்வுடன்,ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வந்தாலும், தாய்த்தமிழை தமிழன் என்ற உணர்வோடு பேணுவதும் அவசியமாகிறது. தமிழ் இதழ்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம்து தார்மீகக்கடமையாகிறது. அதோடு மட்டுமல்லாது தமிழர் மேம்பாட்டிற்காக உழைத்த அன்னார் தெய்வத்திரு.சுப.சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியும் ஆகும் என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.

அந்தமான் முரசு செய்தித்தாள் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட வேண்டுமென வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

கருத்துகள் இல்லை: