வியாழன், 27 மே, 2010

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ்மொழியிலும் கருமங்கள் இடம் பெறும்.

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ்மொழியிலும் கருமங்கள் இடம் பெறும்.  இதற்காக விஷேட மொழிப் பயிற்சிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.      மேலும் ஆள்கடத்தல்,      கப்பம் கோரல்,    போதைப்பொருட்கள் கடத்தல் உட்பட பாரியளவிலான சட்டவிரோதசெயற்பாடுகளை கட்டுப்படுத்த விஷேட பாதுகாப்பு    நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக    பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
பாரியளவிலான    சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு கறுப்புநிறக் கண்ணாடிகளுடனான வாகனங்களும்,    மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யபடாது      » செசி »    இலக்கங்களுடன் போக்குவர த்தில்     ஈடுபடுத்தப்படும் வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கறுப்பு நிறக் கண்ணாடிகளை அகற்றவும்,    வாகனங்களை முறையாகப் பதிவுசெய்வதற்கும் ஒரு வாரகால அவகாசம் வழங்கப்படும்.            இக் காலப்பகுதிக்குள் கறுப்புக் கண்ணாடிகள் அகற்றப்படாத வாகனங்களும்,    முறையாகப் பதிவுசெய்யப்படாத வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,                    சகல இன மக்களுக்கும் ஏற்றவகையில் பொலிஸ் சேவையை நகரத்திலிருந்து கிராமிய மட்டம் வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.         இந்த விஸ்தரிப்பின் ஊடாக சட்டவிரோதச் செயற்பாடுகளை பாரியளவில் கட்டுப்படுத்த    முடிவதுடன்,      பொது மக்களுக்கு சிறந்த சேவையினையும் வழங்கமுடியும்.
தமிழ்மொழி மூலமான சேவையை பொது மக்களுக்கு வழங்கத் தேவையான     தமிழ்மொழி அறிவு பொலிஸாருக்கு வழங்கப்படுவதுடன், கூடுதலாக சிறுபான்மை இனமக்களை பொலிஸ் சேவையில் ஈடுபடு த்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.             மேலும் பொலிஸாரின் ஒழுக்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை: