சனி, 29 மே, 2010

நான் தவறாக எதையும் பேசவில்லை துணை முதல்வர் ராமசாமி.

மதுரை மாநாட்டில் நான் தவறாக எதையும் பேசவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் அளிப்பேன் என்றுதான் கூறினேன். இதில் இந்திய இறையாண்மை எங்கே வந்தது என்றார் பினாங் துணை முதல்வர் ராமசாமி.

மதுரையில் சீமான் நடத்திய நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டோம்:

அவர் கூறுகையில், வேறொரு நாட்டில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்று கூட தெரியாதவனல்ல நான். தமிழ் ஈழத்திற்காகவும், என் தொப்புள் கொடி உறவுகளுக்காகவும் நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

அதனால்தான் சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது.

இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களுக்கு முழு அங்கீகாரம் அளிப்போம். புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவோம். இதை நான் தமிழகத்தில் சீமான் மாநாட்டில் மட்டும் பேசவில்லை. எங்கள் நாட்டிலும் பேசி வருகிறேன்.

ஈழத் தமிழர்கள் விஷயமாக நேற்று கூட ஐ.நா. அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன். எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு முழு உரிமையும் அங்கீகாரமும் அளிப்பேன் என்று கூறியது இந்திய இறையாண்மையை எப்படிப் பாதிக்கும்? என்றார்.

கருத்துகள் இல்லை: