சனி, 29 மே, 2010

பாமக உங்களோடு கூட்டணிக்கு வருமா வராதா? : கலைஞர் பதில்

முதலமைச்சர் கருணாநிதி தலைமைச்செயலகத்தில் இன்ற செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் சமீபகாலமாக பொது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அந்தப் பிரச்சினையை சமாளிப்பது என்பது மத்திய அரசுக்கு ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்களது இலட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன.


இன்றைக்குக் கூட ஒரு பத்திரிகையிலே பார்த்தால், ரெயிலைத் தகர்த்ததில் மாண்டு போனவர்களின் படங்கள் எல்லாம் வெளி வந்திருக்கின்றன.

அதிலே மிகப் பரிதாபகரமான ஒரு காட்சி - இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி. இதிலே அந்தக் குழந்தைகளுக்கும் மாவோ இயக்கத்திற்கும் எந்தவிதமான மாறுபாடான கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது ஒரு புது முறை - பழைய முறை தான் - இருந்தாலும் புதுமுறையாகக் கையாளப்படுவது - சமுதாயத்திலே உள்ள - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றிக் கவலைப்படாமல் - தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகின்ற நிலை வளருவது நல்லதல்ல.

அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் எனக்கு மாறுபாடு இல்லை. ஆனால் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகின்ற ஒரு கருத்து இது. அந்தக் கருத்தை இந்தியாவிலே எங்கேயோ ஒரு மூலையில் தமிழ் நாட்டிலேயிருந்து நான் ஒலிக்கின்றேன். அந்தக் கருத்துக்கு மாவோ தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலையில் இதைப்பற்றி நான் விரிவாக முரசொலியில் கடிதமே எழுதலாம் என்றிருந்தேன். அதற்கு உங்களின் இந்தக் கேள்வி தூண்டுகோலாக அமைந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அதைப் பற்றி விரிவாக எழுதுவேன்.

பா.ம.க. உங்களோடு கூட்டணிக்கு வருமா வராதா என்பது ஒரு விவாதமாக இருக்கிறது. அதுபற்றி?
 நாளைக்குத் தான் எங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு செய்வார்கள் என்று தெரியவில்லையே

கருத்துகள் இல்லை: