ஞாயிறு, 23 மே, 2010

அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

இலங்கையில் தமிழ் ஈழம் அமைப்பதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சி எதற்கு நடத்துகிறீர்கள் என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, அரசியல் அழிந்தாலும், இலங்கை விவகாரத்தை விட மாட்டேன் என வைகோ சொல்லியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரசியலில் ஏற்றத் தாழ்வுகளை தாங்கும் சக்தியை கொண்ட கட்சியும், தலைவரும்தான் உயர்ந்த பதவிகளை எட்டிப் பிடிக்க முடியும். ஆனால், அடுத்தடுத்த கூட்டணி மாற்றங்களால், தொண்டர்களிடம் மட்டுமில்லாமல், நடுநிலையாளர்களிடமும் நம்பகத்தன்மையை பறிகொடுத்து பின் தங்கியிருக்கிறது ம.தி.மு.க.,சோதனைகளை கடந்து, வைகோவின் தலைமையை ஏற்று, ம.தி.மு.க.,வில் தொடரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பதவியை, பணத்தை எதிர்பார்க்காத தொண்டர்கள், நிர்வாகிகள் என்று பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லலாம்.ஆனால், எப்போதாவது, நமது கட்சிக்கும் வசந்தம் வரும்; நாமும் பதவிகளைப் பெறுவோம் என காத்திருப்பவர்கள்... மாற்றுக் கட்சிக்கு போனாலும், மரியாதை கிடைக்காது என்பதால், இங்கேயே தொடர்பவர்கள் என இரு பிரிவாக இருக்கின்றனர் இந்த நிர்வாகிகள். "வைகோவின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த இலங்கைப் பிரச்னைதான், அவரது வீழ்ச்சிக்கும் காரணமாய் இருக்கிறது' என்ற கருத்து அரசியல் பார்வையாளர்களால் எடுத்து வைக்கப்படுகிறது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்னையில், வைகோ காட்டும் அதீத ஆர்வம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கள்ளத்தோணியில் பயணித்து, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தபின், அவர் தமிழகத்து பிரபாகரனாகவே வர்ணிக்கப்பட்டார். ராஜிவ் படுகொலைச் சம்பவத்திற்கு பிறகு, புலிகள் மேல் தமிழக மக்கள் வைத்திருந்த மரியாதை, மதிப்பு, ஆதரவு அனைத்தும் சுக்கல், சுக்கலாகியது. அதற்கு முந்தைய காலங்களில் புலிகளை ஆதரித்த, தி.மு.க., அ.தி.மு.க., உள் ளிட்ட கட்சிகள், இதை உணர்ந்ததால், புலி ஆதரவு பாதையில் இருந்து வெளியே வந்தன. ஆனால், வைகோ புலி ஆதரவு கொள்கையை விடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையையும், புலிகளையும் பிரித்து பார்க்க முடியாது என்ற அவரது வாதம் எடுபடவில்லை. அதன் காரணமாக, அவர் தமிழக மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகளிலும் இந்த பின்னடைவு எதிரொலித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த பின்னடைவை வைகோ உணரவில்லை. மாறாக, இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில், "தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில், வைகோ பேசும்போது, "தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம். விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள்' என வழக்கம்போல் உணர்ச்சிவசப்பட்டார். அத்துடன், "பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை' என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வைகோவின் இந்த பேச்சால், ம.தி.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் சாமியார்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், சாமியார்களே, பதவிக்கும், பட்டத்திற்கும் ஆசைப்படும் காலத்தில், எங்களுக்கும் அந்த ஆசை இருந்தது. "ஒளிமயமான எதிர்காலம் வரும்' என்ற பொதுச் செயலரின் நம்பிக்கை வரிகளை நம்பி, கட்சிக்காக வாழ்வை, பணத்தை இழந்து காத்திருக்கிறோம்.வைகோவுடன் வெளியேறாமல், தி.மு.க.,வில் தொடர்ந்து இருந்திருந்தால், நிச்சயமாக பதவிகளை பெற்றிருக்க முடியும். குறைந்தபட்சம் கையில் இருப்பதை இழக்காமல், இருந்திருக்க முடியும். எங்களைப் போன்ற தொண்டர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், பொதுச்செயலரின் பேச்சு அமைந்துள்ளது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைப்பதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சி எதற்கு நடத்துகிறீர்கள் என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, அரசியல் அழிந்தாலும், இலங்கை விவகாரத்தை விட மாட்டேன் என வைகோ சொல்லியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 

கருத்துகள் இல்லை: