![]() |
minnambalam.com : தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நிர்ணயத்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி 2023 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து கடந்த நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையில் வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 825 குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களும், 11 மின்னணு சாதனங்களும் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்ஐஆர்-இன் நகல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக மொத்தம், 27 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம் பெற்றுள்ளது.
அவரைத் தொடர்ந்து, நீர்வளத் துறை முதன்மை பொறியாளர்களாக இருந்த முத்தையா, ராமமூர்த்தி,
ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் சுகந்தி, ஓய்வு பெற்ற திருச்சி கோட்ட செயற்பொறியாளர் இளங்கோவன், ஓய்வு பெற்ற மதுரை கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன்,
திருச்சி கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், வேலூர் கோட்டை முன்னாள் உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) சம்பத்,
விழுப்புரம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஆர் பாலாஜி, திருச்சி கோட்டத்தின் முன்னாள் உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) சிவகுமார்,
மற்றும் அருள்மணி, தேவராஜ், சுரேஷ்குமார், தீப வாணி, சுகுமார், சங்கீதா, ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், குமாரராஜா, ஆர்.ராஜா, ராஜ்குமார், மோகன்ராம், எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், ஆர் எஸ் கன்ஸ்ட்ரக்ஷன், கே இன்ஃப்ரா உள்ளிட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக லஞ்ச ஒழிப்புத்துறை சேர்த்துள்ளது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்ஐஆர்- ல், “அமலாக்கத்துறை அறிக்கையின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு கடித எண் AC/911-2/2025, (நாள் : டிசம்பர் 10, 2025) மூலம் ஒப்புதல் அளித்தது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மணல் கொள்ளையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கூட்டு சதி செய்து ஆற்று மணல் குவாரி ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
1,427 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, ”திறந்தவெளி ஒப்பந்த முறையை பின்பற்றாமல் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் வரையறுக்கப்பட்ட ஒப்பந்த முறை மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மணலை அள்ளினால், நிலத்தடி நீர்மட்டம் குறையும், கிணறுகள் வறண்டு போகும், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழியும், ஆற்றங்கரை சுற்றுச்சூழல் அமைப்பு சீர்குலையும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே நன்றாக தெரிந்திருந்தும் இதைச் செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2017 நவம்பர் 29ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் அதிகரித்து வந்த சட்ட விரோத மணல் குவாரிகள் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகள் குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விவரங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரிந்திருந்தும் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனர்” என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக