நக்கீரன் : தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி போட்டியிட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான செந்தில்குமாரை 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த வெற்றியை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்ற வாக்காளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “செந்தில் பாலாஜி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பான விவரங்களையும் முறையாக அரசிடம் வெளிப்படுத்தவில்லை. மேலும், இந்த குறைபாடுகள் குறித்துத் தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்துகளுடன் புகார் மனு அளித்தும், தேர்தல் அதிகாரி அவற்றைப் பரிசீலிக்கவில்லை. எனது ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பெற்ற தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று (10.07.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 81வது பிரிவு, ஒரு வாக்காளர் எந்தத் தொகுதியின் தேர்தலையும் எதிர்த்துத் தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. எந்தத் தொகுதியின் தேர்தலை எதிர்த்தும் யார் வேண்டுமானாலும் வழக்கு தொடர அனுமதித்தால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஏராளமான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலை உருவாகும். ஈரோடு மாவட்டம், முடாக்குறிச்சி சேர்ந்த மனுதாரர் பிரகாசம், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல; வாக்காளரும் அல்ல. எனவே,செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக