செவ்வாய், 7 ஏப்ரல், 2026

செந்தில் பாலாஜி : என் பெயரில் 100 பேர் வந்தாலும் பரவாயில்லை

  dinamalar.com : தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தான் எங்கள் இலக்கு. கோவைக்கு கடந்த 5 வருடங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், செய்ய போகும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு கேட்போம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுகிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி செய்திருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல சொல்லுங்கள்.


தேர்தலுக்காக எங்களுக்கு கரூரில் இருந்து ஆட்கள் வரவேண்டிய அவசியமில்லை. கோவையில் உள்ள எங்கள் கட்சி நிர்வாகி ஒவ்வொருவரும் போர் படை சிப்பாய்கள். அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனனும் வெளியூர் தான். அவர் 25 வருடங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். நான் 5 வருடங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளேன்.

அவரைவிட கோவையை பற்றியும், இந்த தொகுதியை பற்றியும் நான் நன்கறிவேன். என்னுடைய பெயரிலேயே இந்த தொகுதியில் இன்னொருவர் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். பரவாயில்லை. இன்னும் 100 பேர் கூட வரட்டும். மக்களுக்கு சின்னம் எது, வேட்பாளர் யார் என்று தெரியும். களத்தில் பார்த்துக் கொள்ளலாம். கோவை தெற்கு தொகுதிக்கு நான் கடந்த ஒரு மாதம் முன்பு தான் விருப்ப மனு கொடுத்தேன்.

எதிர்க்கட்சிகள் சொல்வது போல 6 மாதங்களுக்கு முன்பு முடிவாகவில்லை. அப்போதே முடிவாகியிருந்தால் பல நிகழ்ச்சிகளில் கலந்திருப்பேன். முதலமைச்சர் கட்டளையிட்டதால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். கோவையில் செந்தில் பாலாஜி வந்து தான் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு செந்தில் பாலாஜி சென்றால் இங்கு 100 செந்தில் பாலாஜி வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி என்ற பெயரில் இன்னொருவர் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில்குமார் என்ற பெயரில் நான்கு பேரும், செந்தில் பிரபு என்ற பெயரில் ஒருவரும் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். பாலாஜி என்ற பெயரில் ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: