வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - MLA பதவியை ராஜினாமா செய்தார்!

 மின்னம்பலம் - Mathi  : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று பிப்ரவரி 27-ந் தேதி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தார். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க முடியாத சூழல்களில் 2001, 2014-ல் அவருக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சிறிது காலம் பதவி வகித்தார். 2016-ல் ஜெயலலிதா மறைந்த போதும் சில மாதங்கள் முதல்வராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.



2017 பிப்ரவரி மாதம் அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ். பின்னர் அதிமுகவில் மீண்டும் இணைந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வராக இருந்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

2022-ம் ஆண்டு முதல் அதிமுகவில் தம்மை மீண்டும் சேர்க்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை ஓபிஎஸ் மேற்கொண்டார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் பேசினார். ஆனால் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் எந்த ஒரு முடிவு எடுக்காமல் இருந்தார். இதனால் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தவெகவிலும் பலர் மீண்டும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோர் மட்டும் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தனர். அண்மையில் சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ், ஐயப்பன் இருவரும் பேசி இருந்தனர்.

இந்நிலையில் திமுகவில் இணைய ஓபிஎஸ் முடிவு எடுத்துள்ளார். இதனால் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்.

இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைய இருக்கிறார்; திமுகவில் இணைவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார் என நமது மின்னம்பலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்தோம். கடந்த 12-ந் தேதி மின்னம்பலத்தில், “ தேனி செட்டியபட்டியில ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி உட்பட 30 பேருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துனாரு.. அந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், திமுக கூட்டணிக்கு இப்ப இருக்கிற உரிமை மீட்பு கழகம் பெயரிலேயே போய் சேரலாம்.. நானும் ஐயப்பனும் 2 எம்.எல்.ஏக்கள் இருக்கிறதால கூடுதலா 1 சீட்டுன்னு மொத்தம் 3 சீட் தருவாங்க..” என கூறியிருந்ததை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை: