minnambalam.com - Mathi : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (DMK Congress) 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று பிப்ரவரி 22-ந் தேதி இரவு கையெழுத்தாகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 22-ந் தேதி ஐவர் குழுவை அறிவித்தது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், (கிரிஷ் சோடங்கர்), தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த ஐவர் குழு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியது.
அப்போது, ஆட்சியில் பங்கு- அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசியிருந்த சபரீசன் காங்கிரஸுக்கு 25 முதல் 28 தொகுதிகள் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதன் பின்னர் ஆட்சியில் பங்கு- அதிக தொகுதிகள் ஒதுக்கீடு என காங்கிரஸ் கட்சியில் சிலர் பேசி வந்தனர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
திமுக- காங்கிரஸ் இடையேயான உறவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின், சபரீசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய நிலையில் டெல்லி சென்று ராகுல் காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை சாத்தியம் இல்லை என்பது குறித்து ராகுல் காந்தியிடம் கனிமொழி விளக்கமாக பேசினார். இதனை ஏற்று அந்த கோரிக்கையை வலியுறுத்தவில்லை என ராகுல் காந்தி, கனிமொழியிடம் உறுதி அளித்திருந்தார். இதன் பின்னர் பிப்ரவரி 22-ந் தேதி முதல், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்தது.
மேலும் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என சோனியா காந்தியை சந்தித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை கடந்த வாரம் சோனியா காந்தி, கார்கே ஆகியோர் தொடர்பு கொண்டு பேசினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் முடிவுக்கு வந்து கூட்டணி உறுதியானது.
சென்னைக்கு கடந்த வாரம் வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு சுமூகமான பதிலை கூறியிருந்தார். மேலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் கட்சியினர் பேசக் கூடாது என கேசி வேணுகோபால் , சோடங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் திமுக மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழு இன்று காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர் இன்று இரவு 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கின்றனர்.
இச்சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தில் திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுக்களின் தலைவர்கள் கையெழுத்திடுகின்றனர் என்று ஸ்டாலின், ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக