சனி, 11 மே, 2024

கே.சந்திரசேகர் ராவ் (Ex Cm telungana) : மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்!

 tamil.oneindia.com -  Vigneshkumar  : டெல்லி: லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பிஆர்எஸ் கட்சித் தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கேசிஆர் கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடக்கிறது. இதில் மொத்தம் 10 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது.
குறிப்பாகத் தெலுங்கானாவில் மொத்தம் இருக்கும் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்றுடன் அங்குப் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், பல்வேறு தலைவர்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார்கள்.



மாநிலக் கட்சிகள்: இதற்கிடையே லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ள கருத்துகள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது. அதாவது இந்த முறை பல மாநிலக் கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியை அமைக்கலாம் என்றும், என்டிஏ அல்லது இந்தியா கூட்டணிகள் அந்த பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவு தர நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கேசிஆர் அளித்த பேட்டியில், "உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை தேர்தலுக்குப் பிறகு நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. இந்த தேர்தலில் அவர்கள் ஒரு சக்தியாக உருவெடுப்பார்கள்.. என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று இல்லை. இந்த இரு கூட்டணியில் ஒன்று தான் இந்த பிராந்தியக் கட்சிகளின் குழுவை ஆதரிக்க வேண்டும். இந்த தலைகீழ் நிகழ்வு அங்கு நடக்க உள்ளது. அதை நீங்களும் பார்க்கத் தான் போகிறீர்கள்.

4ஆம் கட்ட லோக்சபா தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது! களத்தில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் யார்!


தெலுங்கானா அரசியல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. ரேவந்த் ரெட்டி அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை மட்டுமே செயல்படுத்தி உள்ளனர். ஆனால், அதுவும் கூட பெரிய ஜோக் ஆகிவிட்டது. பெண்கள் பேருந்துகளில் சண்டையிடுகிறார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளில் போராட்டம் இருக்கிறார்கள். இதனால்தான் மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்.

எனது ஆட்சியின் போது மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய மக்களும் கூட காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இவை எல்லாம் லோக்சபா தேர்தல் முடிவுகளில் தெரியும்" என்றார்.

தோல்வி இல்லை: கடந்த டிசம்பர் மாதம் நடந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் கேசிஆர் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்து இருந்தது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "என்னை யாராலும் அணுக முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தனர். அதை மக்கள் நம்பியதாலேயே எங்களைத் தோற்கடித்தார்கள். எனது அரசு இருந்த போது தான் மக்களுக்கு நிலையான மின்சாரம், குடிநீர் மற்றும் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைத்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் மிகவும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டனர். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையே வெறும் 1.8 சதவிகிதம் தான் வாக்கு வித்தியாசம்.. எனவே இதைத் தோல்வி எனக் கருத முடியாது. கே.சி.ஆரை விடக் காங்கிரஸ் அதிக வளர்ச்சியைத் தரும் என மக்கள் நம்பி அவர்களுக்கு வாக்களித்தனர். இப்போது காங்கிரஸ் எதையும் செய்யாததால் அவர்கள் செம கோபத்தில் உள்ளனர்" என்றார்.

பாஜக, மோடி: தொடர்ந்து பாஜக குறித்தும் மோடி குறித்தும் பேசிய அவர், "பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டது. விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். வேலை கிடைக்காததால் மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே இந்த முறை மாற்றம் நிச்சயம்" என்றார்.

கருத்துகள் இல்லை: