bbc.com - , ஜெசிகா மர்பி : இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது.நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் -கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள கனடா புலனாய்வு அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கொஞ்சம் கடினமானதாகவும் சவாலாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான நிஜ்ஜார், காலிஸ்தானுக்காக பகிரங்கமாக, இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.
அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ
சீக்கியர்கள் 1970களில் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னை தணிக்கப்படுவதற்கு முன்னரே, அடுத்த பத்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்த இயக்கம் பெரும்பாலும் சீக்கிய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்தியா கடந்த காலங்களில் நிஜ்ஜாரை ஒரு போர்க்குணமிக்க பிரிவினைவாத குழுவிற்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. "அவரது ஆதரவாளர்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது செயல்பாட்டின் காரணமாக கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர்கள் கூறுவது ஆதாரமற்றது" என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனடாவின் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராஸ் கவுன்சிலின் உறுப்பினரான மொனிந்தர் சிங், நிஜ்ஜாருடன் 15 ஆண்டுகளாக நட்பு கொண்டிருந்தவர், ``விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய சமூகம் நன்றியுடன் இருக்கும். இருப்பினும்,கொஞ்சம் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையும் நிறைய பதற்றமும் உள்ளது. இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி வழக்கு நியாயமாக விசாரிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது,” என அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
நிஜ்ஜார் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனடாவின் நாடாளுமன்றத்தில் (House of Commons) உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ”இந்திய அரசை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என கனடா கவனித்து வருகிறது,” என்று கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். கனடா "காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு" அடைக்கலம் அளித்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு டெல்லி ஒட்டாவாவிடம் கோரியது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் ட்ரூடோ, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக