tamil.oneindia.com - Halley Karthik : ‛தமிழ் கற்றே ஆகணும்’.. வடமாநில ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே ‛ஆர்டர்’.. பஞ்சாயத்துக்கு ‛எண்ட் கார்டு’?
சென்னை: தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரயில்வே சேவையை மேலும் மேம்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
பொதுவாக ரயில்வே துறை என எடுத்துக் கொண்டாலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்
இதில் பணிபுரிவார்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணிப்புரிகிறார்கள். இதனால் பணிகளுக்கும், ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.
Order to teach regional language to Southern Railway employees
குறிப்பாக முன்பதிவு செய்யும் போது ஏராளமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதேபோல் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர்களிடையேயும் மொழி பிரச்னையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த பிரச்னைகளை சரி செய்ய தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.
அதாவது வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியை சொல்லிக்கொடுப்பது என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. இது குறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரயில்வே, தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம் கருதுகிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது.
எனவே அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
'கர்மயோகி' மின்-கற்றல் தளத்தின் கீழ் இதற்கான கன்டென்ட்கள் உருவாக்கப்படும். அதேபோல இந்திய அரசின் கல்வி அமைச்சகம், 'MyGov' இந்தியாவுடன் இணைந்து உருவாக்கிய 'பாஷா சங்கம்' எனும் மொபைல் செயலியையும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது டிக்கெட் முன்பதிவு செய்யும் ஊழியர்கள், பயண டிக்கெட் பரிசோதகர்கள், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் கேட்டரிங் ஊழியர்கள், லோகோ பைலட்டுகள் ஆகியோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பணிகளுக்கும்-ஊழியர்களுக்கும் இடையேயான மொழிப்பிரச்னை பொதுவானது. இது தவிர ரயில்வே ஊழியர்களுக்கிடையேயும் மொழி பிரச்னை காரணமாக தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு வழித்தடத்தில் பகலில் 15 கிமீ மற்றும் இரவில் 10 கிமீ என வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், 50 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்குமாறு சேலம் கோட்டத்தில் உள்ள அதிகாரி ஒருவர் லோகோ பைலட்டுக்கு உத்தரவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. எனவே இது போன்ற பயிற்சிகள் மூலம் விபத்துகளையும் தடுக்க முடியும்” என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக