புதன், 8 மே, 2024

ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா? ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்!

 மாலை மலர் :  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.

இதுஒருபுறம் இருக்க, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதாவது எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஜெயக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும்போது அவரது கழுத்தில் தொடங்கி கால் பாதம் வரையிலும் மின் வயர் சுற்றப்பட்டிருப்பதும், முதுகு பகுதியில் கடப்பா கல் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் அவரது கழுத்து பகுதியில் வயரால் நெரிக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால் அவர் கொலை தான் செய்யப்பட்டிருப்பார் என்று போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூலிப்படையினர் தான் இதுபோன்ற முறையில் கொலை செய்வார்கள் என்பதால், ஜெயக்குமார் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஜெயக்குமார் அரசியலில் மட்டுமல்லாது அரசு ஒப்பந்ததாரராக பல தொழில்களை செய்து வந்தார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தியின் கோரிக்கையின் அடிப்படையில், இறந்த நபர் ஜெயக்குமார் தானா? என்பதை அறிய அவரது மகன்கள் 2 பேரிடமும் டி.என்.ஏ. மாதிரி எடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனிப்படை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜெயக்குமார் தனது கடிதங்களில் தனக்கு வர வேண்டிய பணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடன் வாங்கியது பற்றி எந்தஒரு இடத்திலும் அவர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அவரது செல்போன் இதுவரை கிடைக்காவிட்டாலும் அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி ஆய்வு செய்தோம்.

அதுபோல அவர் யார்-யாரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் என்பது பற்றி பட்டியல் தயாரித்து ரகசியமாக விசாரணை நடத்தினோம். அப்போது தான் அவர் 50-க்கும் மேற்பட்டவரிடம் கடன் வாங்கியிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் சென்று அவர் கடன் வாங்கி இருக்கிறார்.

பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அவர் கடன் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் இதுவரை திரட்டி உள்ள தகவல்படி அவர் ரூ.40 கோடி வரை கடன் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

கோடிக்கணக்கில் வாங்கிய கடன் பணத்தை வைத்து தான் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்காததால் பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஜெயக்குமார் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடம் பணம் திருப்பி கேட்டவர்களை பதிலுக்கு மிரட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

அப்படி கொலை மிரட்டல் விடுத்தவர்களில் ஒருவர்தான் ஜெயக்குமாரை திட்டமிட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். அந்த நபர் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடாமல் கூலிப்படையை ஏவி காரியத்தை முடித்து இருக்கிறார். தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்கிய நகரங்களில் கூலிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

மதுரை கூலிப்படையினர் ஒருவிதமாகவும், தூத்துக்குடி கூலிப்படையினர் ஒரு விதமாகவும், நெல்லை கூலிப்படையினர் ஒருவிதமாகவும் தங்களது பாணியில் கொலை செயல்களில் ஈடுபடுவார்கள். ஜெயக்குமாரின் கை, கால்களை கட்டி கொலை செய்து இருப்பது மதுரை கூலிப்படையினர் நடத்தும் பாணியாகும்.

எனவே மதுரையைச் சேர்ந்த ஏதாவது ஒரு கூலிப்படைதான் ஜெயக்குமாரை கொலை செய்து எரித்து இருக்க வேண்டும். அது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

கூலிப்படையை ஏவிய பிரமுகர் அரசியல் பிரமுகரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுப்பவரா? என்பது தெரியவில்லை. அது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயக்குமார் கொன்று எரிக்கப்பட்டது பல ஆய்வுகள் மூலம் உறுதியாகி விட்டது.

அவர் தற்கொலை செய்து இருந்தால் அவரது கால் பாதம் எரிந்து இருக்க வாய்ப்பில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தீக்குளித்து இருந்தால் தீ புகையை அவர் சுவாசித்து இருப்பார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலில் அத்தகைய புகை தாக்கம் எதுவும் இல்லை.

எனவே ஜெயக்குமார் கை, கால்கள் கட்டப்பட்டு கடப்பா கல்லில் இணைத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பிறகு அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த பாணியிலான கொலையாளிகள் பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை: