வியாழன், 18 நவம்பர், 2021

கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? .. கொலை வழக்கு

கொலை வழக்கு: திமுக எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா?

மின்னம்பலம் : கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக இன்று (நவம்பர் 18) ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஆலை உள்ளது. இதில் பணியாற்றி வந்த தொழிலாளி கோவிந்தராஜூ கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அதன் பிறகு கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 39 நாட்கள் கடந்துவிட்டன. இதனிடையே அவர், ஜாமீன் கேட்டு கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நேற்றும் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது புகார்தாரருக்காக (கோவிந்தராஜூ குடும்பம் சார்பில்) தலையீடு மனு தாக்கல் செய்த பாமக வழக்கறிஞர் பாலு, “திமுக எம்.பி. அவரது அதிகாரத்தை பயன்படுத்தி கடலூர் மத்திய சிறைக்கு செல்லாமல், தொடர்ந்து கடலூர் கிளை சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், தற்போது இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என கடுமையான ஆட்சபனை தெரிவித்தார்.

தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, “கடலூர் கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ரமேஷுக்கு சலுகை காட்டப்படுவதாக கோவிந்தராஜூவின் மகன் தரப்பில் குற்றம்சாட்டப்படுவது தவறு எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸ் காவலுக்கு அழைத்து செல்லும் போது காயம் ஏற்பட்டதால் முதலுதவி அளித்து அழைத்துச் சென்றதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த பின் சிறையில் அடைக்கப்பட்டதாகவும்” கூறினார்.

தொடர்ந்து அவர், “கண்காணிப்பு கேமரா பதிவுகள் குறித்த தடயவியல் ஆய்வு அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாகவும், மாநில அரசே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது எனவும் புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது” எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து மீண்டும் ஆஜரான வழக்கறிஞர் பாலு, “விசாரணை அதிகாரி நியாயமாக விசாரிக்கவில்லை. பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரமேஷின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தார்.

அதேபோல, புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கும் வகையில் சிபிசிஐடியில் உள்ள வேறொரு அதிகாரியை பரிந்துரைக்க கோவிந்தராஜூ மகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ விசாரணை கோரிய மனுவையும் நாளைக்கு தள்ளிவைத்தார்.

-வணங்காமுடி

file youtube

கருத்துகள் இல்லை: