மின்னம்பலம் : மழை வெள்ளத்தை பார்வையிட அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் தனித்தனியாக பார்வையிட சென்றதால் கீழ் மட்ட நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
தொடர் மழையால் தத்தளித்து வந்த சென்னை மாநகரத்தை ஆளுங்கட்சி எம் எல் ஏ கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆளுக்கு ஒரு பக்கம் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கூடுதலாக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏழு நாட்களாக சென்னையை சுற்றிச் சுற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். நேற்று முன்தினம் (நவம்பர் 12) ஒருங்கிணைப்பாளர் ஒரு பக்கம், இணை ஒருங்கிணைப்பாளர் ஒரு பக்கம் சென்று பார்வையிட்டு உணவு பொருட்கள் மற்றும் உடைகள் வழங்கினார்கள்.
வேளச்சேரியைச் சேர்ந்த அம்மா பேரவை மாநில துணை செயலாளரான எம்.ஏ.மூர்த்தி ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸை சந்தித்து, ‘நவம்பர் 12 ஆம் தேதி எங்கள் பகுதிக்கு நிவாரணம் பொருட்கள் கொடுக்க வாருங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வைக்கிறேன்’ என அழைத்துள்ளார். அதற்கு ஒபிஎஸ் , ’அதேநாளில்தான் வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதிக்கு இபிஎஸ் செல்கிறார், நான் வரும் புதன் கிழமை வருகிறேன்’ என்று தவிர்த்துள்ளார்.
ஆனால் மறுநாளான நவம்பர் 13ஆம் தேதி முன்னாள் எம். எல். ஏ. வும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான அசோக், வேளச்சேரிக்கு ஓபிஎஸ்சை அழைத்து வந்து, மருதப்பாண்டி தெரு மற்றும் வண்டிக்காரன் தெருவில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
விரக்தியான எம். ஏ. மூர்த்தி, மாவட்டச் செயலாளரான விருகை வி. என். ரவி, மைத்ரேயன் இருவரையும் இன்று நவம்பர் 14 ஆம் தேதி அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்தி நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் இப்போதைய இரட்டைத் தலைமை பற்றி விரக்தியாக பேசிய எம்.ஏ. மூர்த்தி... சசிகலாவைப் பற்றி பாசிட்டிவாக பேசியிருக்கிறார். விரைவில் சசிகலாவை சந்திப்பார் அம்மா பேரவை மூர்த்தி என்கிறார்கள் அதிமுகவினர்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக