Asianet Tamil : மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 217 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நூலிழையில் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக நூலிழையில் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. என்றாலும் கடந்த தேர்தலை போல அல்லாமல் கடும் போட்டியை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பிப்ரவரியில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 317 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள் துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார். இதற்காக பாஜக சார்பில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை அமித்ஷா நடத்தி வருகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சியும் இப்போதே தேர்தலுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்னொரு முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியும் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் சார்பில் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. இந்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் பாஜக பிடிக்கும் சூழல் உள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 217 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நூலிழையில் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதே வேளையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 100 தொகுதிகளை பாஜக இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு அடுத்த இடத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 150 முதல் 160 தொகுதிகளை வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாஜகவுக்கும் சமாஜ்வாடிக்கும் 60 தொகுதிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன. எனவே, பாஜகவை சமாஜ்வாடி துரத்துகிறது. இன்னும் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக - சமாஜ்வாடி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக