புதன், 17 நவம்பர், 2021

ஜெய் பீம்: IMDB ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம்.. BBC

ஜெய்பீம்

பி பி சி - அசீம் சாப்ரா     திரைப்பட பத்திரிகையாளர்  : தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம். சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைச் சொல்லும் இந்தியத் திரைப்படங்களில் இது சமீபத்தியது என்று எழுதுகிறார் திரைப்படப் பத்திரிகையாளர் அசீம் சாப்ரா.
ஞானவேல் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் சாதீயப் பாகுபாட்டை மையமாகக் கொண்டது. வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
ஜெய் பீம் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வரப்பட்டவர்கள் சாதியின் அடிப்படையில் பிரிப்பதாகக் காட்டப்படுகிறது.


ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களை அங்கேயே இருக்குமாறு கூறி, அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

இது மனதை சங்கடப்படுத்தும் காட்சி. அந்தக் குழுவில் அச்சத்தில் நடுங்கியவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவின் விளிம்புநிலை, குறிப்பாக தலித்துகளின் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டும் வகையில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 20% பேர் தலித்துகள். அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதிலும் அவர்கள் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெய் பீம் என்றால், பீம் வாழ்க என்று பொருள். புறக்கணிக்கப்பட்ட மக்களின் தலைவரான, இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பியான பி.ஆர். அம்பேத்கரின் ஆதரவாளர்களால் பிரபலப்படுத்தப்பட்டது இது.

ஜெய் பீம் திரைப்படம் தமிழ் சினிமா பயணிக்கும் புதிய போக்கின் ஒரு அங்கமாகவே கவனிக்கப்படுகிறது. பல இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சாதிய அடக்குமுறைகளைப் பின்புலமாகக் கொண்ட கதைகளைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

1991ஆம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டு விழா அனுசரிக்கப்பட்டது முதல் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் இயக்கம் வளர்ந்து வருகிறது என்று திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ் தியோடர் பாஸ்கரன் கூறுகிறார்.

"20 ஆம் நூற்றாண்டின் மறக்கப்பட்ட தலித் சித்தாந்தங்கள் வரலாற்றில் இருந்து மீட்கப்பட்டன. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவியிருந்தன. கடந்த பத்தாண்டுகளில், சில எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று திரைப்படங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் வழக்கமான பாடல்கள், சண்டைகள், மெலோட்ராமா பாணியைப் பயன்படுத்தினர்"

இப்போது, ​​தலித் சீக்கியர்களின் வாழ்க்கையைக் கூறும் அன்ஹே கோர்ஹே டா டான் (பஞ்சாபி), தகனம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனுக்கும் உயர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதலைக் கூறும் மசான் (ஹிந்தி), ஃபேன்ட்ரி மற்றும் சைரட் (இரண்டும் மராத்தி) உட்பட பிற இந்திய மொழி சுயாதீனத் திரைப்படங்களிலும் தலித் கதைகள் இடம் பெற்றுள்ளன.

கிராமத்தில் பன்றிகளைப் பிடிக்கும் ஒரு சிறுவனின் கதையையும், ஒரு உயர் சாதிப் பெண்ணின் மீதான அவனது காதலையும் விவரிக்கிறது ஃபேன்ட்ரி. சாதி மறுப்புக் காதலைக் கூறும் இந்த இசைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த வரிசையில் தமிழில் வெளியான கூழாங்கல் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான 2022 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்கத் தேர்வானது.

ஆனால் இப்போது வெகுஜன தமிழ் சினிமாவின் பல கதாநாயகர்கள் தலித்துகள். நீண்ட காலப் பாகுபாட்டை எதிர்த்து தங்களது உரிமையை நிலைநாட்டப் போராடுபவர்கள். சட்டப்பூர்வ வழி அவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவராதபோது, ​​​​அவர்கள் உடல் ரீதியாக மோதிப் பார்க்கவும் தயாராக இருக்கின்றனர்.

முன்னணி இயக்குநர்களின் ஒருவரான, ஆந்திராவில் குடியேறிய தமிழ் மக்களின் அவலத்தைப் பற்றிய விசாரணை, தலித்துகளின் படுகொலைகளை களமாகக் கொண்ட அசுரன் ஆகிய திரைப்படத்தை எடுத்தார். மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் இருவரும் தலித் நாயகனைக் கொண்டு கதைகளை உருவாக்கிய இரண்டு முக்கிய இயக்குநர்கள்.

"தலித் கதாபாத்திரங்களை காட்டிய விதம் வேதனையாக இருந்தது" என்கிறார் தலித் சமூக அவலங்களைத் திரைப்படமாக எடுக்கும் பா. ரஞ்சித். தமிழ்த் திரையுலகின் ஸ்பைக் லீ அவரைக் குறிப்பிடுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், முந்தைய தமிழ்ப் படங்களில் தலித் பாத்திரப் படைப்பு பற்றி "தி வயரிடம்" பா ரஞ்சித் பேசியிருந்தார். "ஒன்று தலித் பாத்திரங்கள் காட்டப்படவில்லை, அல்லது கதையில் அவை சேர்க்கப்படுவது 'புரட்சிகரமாக' கருதப்பட்டது."

"இத்தகைய சூழலில், எனது கதைகள் என்ன சொல்ல முடியும் என்பதை நான் சிந்திக்க வேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

"எனது கலாச்சாரமே பாகுபாடு மற்றும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நான் காட்ட விரும்பினேன்...இன்று, இயக்குநர்கள் தலித் கதாபாத்திரங்களை எழுதும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்." என்றார் அவர்.

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பெரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தவர் ரஞ்சித். "சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது" என்ற எழுத்துக்களுடன் படம் தொடங்கும். படத்தின் நாயகன் அம்பேத்கரைப் போல் வழக்கறிஞராக வரும் ஆசை கொண்டவன.

பெரியேறும் பெருமாள் படத்தில், "போராடடா" என்ற பாடலுக்கு நடனமாடும் குழுவில் இருக்கிறார் மாரி செல்வராஜ். 1983-இல் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலில் "நந்தன் இனமே பெறும் அரியாசனமே, எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை, பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்" போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

2021-ஆம் ஆண்டில் வெளியான மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்திலும் இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இப்போது அது தலித் கீதமாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் படத்தால் ரஞ்சித்தின் படங்கள் கூடுதல் கவனம் பெற்றன. தனக்கு சொல்லப்பட்ட கதைகளால் நெகிழ்ந்துபோன ரஜினிகாந்த், கபாலி (மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் நிழல் உலக கதை) மற்றும் காலா (மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நடக்கும் கதை) கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

அவரது சமீபத்திய படமான, சார்பட்டா பரம்பரையில், முகமது அலியால் ஈர்க்கப்பட்ட சென்னை தலித்துகளின் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், வியட்நாம் போர், இனவெறி போன்றவற்றுக்கு எதிரான அவரது போர்க் குரல்களையும் விவரிக்கிறார்.

மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் தற்போதைய தலித் பிரதிநிதித்துவம் இத்தகைய பாராட்டுகளுக்கு தகுதியற்றது என்று சிலர் நினைக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு வெளியான மாடத்தி திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை, நவீன சினிமா போதுமான அளவுக்கு மாறிவிடவில்லை என்கிறார்.

" ஹீரோ, அதீத ஆண்மை, எங்கும் நிறைந்திருக்கிற, மாவீர மீட்பர் கொண்ட அதே கதைகளே திணிக்கப்படுகின்றன" என்று லீனா மணிமேகலை கூறினார்.
பரியேறும் பெருமாள்


"இப்போதைய படங்களில் பெண் பாத்திரங்கள் தங்கள் கணவன் அல்லது காதலர்களுக்கு வெறும் முட்டுக்கட்டைகளாக இருப்பார்கள், அல்லது சியர்லீடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாகுபாடுகளில் இருந்து கோடாரிகள், துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்களைக் கொண்டு தங்களது ஹீரோக்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என புறக்கணிக்கப்படும் சமூகங்கள் காத்திருக்கின்றன"

ஆயினும் இத்தகைய நவீன சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெய் பீம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் IMDb ஆன்லைன் தளத்தில் 9.6 பயனர் மதிப்பீட்டைப் பெற்று முதலிடத்துக்குச் உயர்ந்திருக்கிறது ஜெய் பீம்.

சுதா ஜி திலக்கின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது. அசீம் சாப்ரா ஒரு சுயாதீன திரைப்பட எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர். இர்ஃபான் கான்: தி மேன், தி ட்ரீமர், தி ஸ்டார் என்ற புத்தகத்தை அண்மையில் எழுதினார்.

கருத்துகள் இல்லை: