தினமலர் : மிஸ் கேரளா(2019) பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொச்சி, மிஸ் கேரளா(2019) பட்டம் வென்ற அழகி அன்சி கபீர்(25 வயது) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன்(26 வயது) மற்றும் அவர்களுடைய நண்பர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் மர்மமான முறையிம் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1ம் தேதி அன்று கொச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகினர்.
அன்சி கபீரின் குடும்பத்தார், இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை வேண்டும் என்று பாலரிவட்டம் போலீசிடம் புகார் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து, பாலரிவட்டம் போலீசார் தீவிர விசாரனையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நவம்பர் 1ம் தேதி அன்று அவர்கள் அனைவரும் கொச்சியில் உள்ள நம்பர்.18 போர்ட் ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்துகொண்டு அதன்பின் ஷாஜனின் சொந்த ஊரான திருச்சூரை நோக்கி நள்ளிரவில் காரில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்கரபறம்பு பகுதியில் இருந்த மரத்தில் கார் மோதியதால் அழகிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆசிக் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் சில நாட்கள் கழித்து அவரும் மரணமடைந்தார்.
அன்சீ கபீரின் தாயார் இந்த மரண செய்தியை கேட்டவுடன் விஷம் அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். பின் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக காரின் ஓட்டுனர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்த போது ஆடி கார் ஒன்று அவர்களது காரை பின்தொடர்ந்து சென்றுள்ளது தெரிய வந்தது.
அந்த ஆடி காரை ஓட்டிச் சென்ற சைஜுவிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அழகிகள் பயணித்துகொண்டிருந்த கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்ததால் அவர்களிடம் எச்சரிக்கை விடுப்பதற்காக தான் ஆடி காரில் பின்தொடர்ந்து சென்றதாக கூறினார். விபத்துக்கு பின்னர், அந்த இடத்திலிருந்து தான் சென்றுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்டவுடன் ஆடி காரிலிருந்து வேறு ஒரு நபரும் கீழே இறங்கி பார்த்துள்ளது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. மேலும், அழகிகளுடைய நண்பர்களும் சம்பவ இடத்திற்கு வேறு வாகனங்களில் உடனே வந்து பார்த்துள்ளனர்.
கைதாகியுள்ள ஓட்டல் அதிபர் ராய் வயலாட்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து உடனே கலைந்து சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீசார் சம்மன் அனுப்பியும், ராய் விசாரனைக்கு வராமல் இருந்துள்ளார்.
நள்ளிரவு நடந்த பார்ட்டியில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருக்கலாம் என்றும் அங்கு மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுபோன்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
நவம்பர்-16 ஓட்டல் அதிபரிடம் விசாரணை:
ஓட்டலில் பதிவாகி இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையை முடுக்கிவிடலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், நள்ளிரவு பார்ட்டியில் அழகிகள் பங்கேற்ற சிசிடிவி காட்சிகள் ஓட்டலில் இல்லை. இது தொடர்பாக நம்பர்.18 போர்ட் ஓட்டலின் உரிமையாளர் ராய் வயலாட் மற்றும் அவருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் கைது செய்து விசாரனை நடத்தியது காவல்துறை. ஓட்டல் ஊழியர்களிடம் நடந்த விசாரணையில், ஓட்டல் அதிபர் தான் அந்த சிசிடிவி பதிவை அழிக்க சொன்னதாக ஒரு ஊழியர் கூறியுள்ளார்.
எனினும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஓட்டல் அதிபரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மேலும் மற்றொரு ஹார்டு டிஸ்க்கை காணவில்லை. இது தொடர்பாக போலீசார், கைதாகியுள்ள ஓட்டல் ஊழியர்களை தேவாரா பகுதியில் உள்ள கண்ணம்கட்டு பாலத்திற்கு கொண்டு சென்று அந்த சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக