மின்னம்பலம் : முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 19) ஜாமீன் வழங்கியது.
கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான டிஆர்வி ரமேஷூக்கு சொந்தமாக பணிக்கன்குப்பம் பகுதியில் முந்திரி ஆலை உள்ளது. இங்குத் தொழிலாளியாக பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரமேஷ் கடந்த அக்டோபர் 11 தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எம். பி. ரமேஷின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முந்திரி ஆலையிலிருந்து 7 கிலோ முந்திரியைத் திருடியதாக கோவிந்தராஜு தாக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் எம்.பி. ரமேஷ் இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தபோது, எம்.பி.ரமேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வழக்கறிஞர் பாலு ஆட்சேபனை தெரிவித்தார்.
அதுபோன்று, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, “கடலூர் கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.பி ரமேஷுக்கு சலுகை காட்டப்படுவதாக கோவிந்தராஜுவின் மகன் தரப்பில் குற்றம்சாட்டப்படுவது தவறு எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து இவ்வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
இன்றைய விசாரணையில், எம்.பி.தரப்பில், இன்றுடன் 40 நாட்களாகச் சிறையில் உள்ளார். விசாரணை எல்லாம் முடிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் ரமேஷூக்கு ஜாமீன் கொடுப்பதன் மூலம், இந்த வழக்கில் அவரால் வேறு எந்த தடையும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி நிர்மல்குமார், எம்.பி.ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதோடு, விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று கோவிந்தராஜுவின் மகன் செந்தில் வேல் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நவம்பர் 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-பிரியா, வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக