கலைஞர் செய்திகள் : சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் தேங்கிய 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை கடந்த 2 நாட்களில் அகற்றம். குமரியில் மழைக்கால மருத்துவ முகாம்கள் முறையாக நடைபெறுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் மழைக்கு பிறகான முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாள்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று வட சென்னையில் தொடங்கிய நிலையில் , இன்று தென் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1300 இயந்திரங்கள் , 3,400 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் . கொசு , புகை மருந்துகள் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 நாள் பெய்த இடைவிடா மழையில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாள்தோறும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்படும். ஆனால் மழை காரணமாக கடந்த 2 நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
இம்முறை 2 வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியோர் எண்ணிக்கை 75 லட்சமாக உள்ளதால் சென்னையில் வழக்கமாக நடைபெறும் 1600 இடங்களுக்கு பதிலாக 2 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வீடு தேடி தடுப்பூசி திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த 3 நாட்களில் , நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 87 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இலக்கை காட்டிலும் கூடுதல் தடுப்பூசி ஒன்றிய அரசிடமிருந்து வந்துள்ளது. தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது .
சென்னையில் பல இடங்களில் மழை பாடத்தை கற்றுத் தந்துள்ளது. அடுத்த மழைக்கு பாரதிதாசன் நகர் , ஈக்காட்டுத்தாங்கல் , அண்ணா நகரில் மழை நீர் தேங்காது. பட்டாளம் டிமலஸ் சாலை கால்வாய் ஆக்கிரமிப்பு ஆய்வு செய்து , சரி செய்யப்படும்
வரும் காலத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க திட்டம் வகுக்கும் வகையில் 14 பேர் கொண்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருந்துவ முகாம்கள் கன்னியாகுமரியில் முறையாக நடைபெறுகிறது. தொலை நோக்கு பார்வையுடன்தான் நாங்கள் செயல்படுகிறோம். எல்.முருகனிடம் ஏதாவது திட்டம் இருந்தால் கேட்டு சொன்னால் அதையும் செய்கிறோம் " என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக