வெள்ளி, 19 நவம்பர், 2021

40,000 தமிழ் பிராமண இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிப்பு - வடமாநிலங்களில் பெண் தேடும் நிலை

 News18 Tamil : தமிழ்நாட்டில்  திருமணத்துக்காக வரண் தேடும் 30 முதல் 40 வயதுடைய பார்ப்பன  இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40,000க்கும் அதிகம் என்றும், 10 பார்ப்பன இளைஞர்களுக்கு தமிழகத்தில் திருமண வயதில் 6 பெண்களே கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
40,000க்கு மேற்பட்ட அந்த ஜாதி இளைஞர்கள் திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் தவிப்பதால் உத்தரப்பிரதேசம், பீகாரில் தகுந்த மணமகள்களை மணமுடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திருமணத்துக்காக தங்கள் சமூகத்தில் பெண் கிடைக்காமல் 40,000க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்து இளைஞர்கள் இருந்து வருவதால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பொருத்தமான பெண் வரன்களை தேடும் சிறப்பு முயற்சியில் தமிழக பிராமணர் சங்கம், (தாம்ப்ராஸ்) இறங்கியுள்ளது.
‘பிராமணர் சங்கம்’ நவம்பர் மாத இதழில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் என்.நாராயணன், பிராமண சங்கத்தின் சார்பில் வரன் தேடும் சிறப்பு இயக்கத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருமணத்துக்காக வரண் தேடும் 30 முதல் 40 வயதுடைய பிராமண இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40,000க்கும் அதிகம் என்றும், 10 பிராமண இளைஞர்களுக்கு தமிழகத்தில் திருமண வயதில் 6 பெண்களே கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக பிற மாநிலங்களில் பெண் தேடுவதற்கான சிறப்பு நடவடிக்கையாக டெல்லி, லக்னோ, பாட்னா போன்ற நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள், அதே போல அங்கிருந்து வரும் திருமண தகவல்களை ஒருங்கிணைக்க தமிழக பிராமன சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இந்தி பேச, படிக்க, எழுத தெரிந்த சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சாத்தியமானது தான். இதற்கான பணிகளை துவங்கியிருக்கிறோம் என்றும் இது நாராயணன் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்காக காத்திருக்கும் தமிழக பிராமண இளைஞர்களுக்கு வட மாநிலங்களில் இருந்து வரன் தேடிக் கொண்டுவரும் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் முயற்சியை அச்சமூகத்தின் ஒரு சாரார் பாராட்டினாலும், ஒரு சாரார் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரும், கல்வியாளருமான பரமேஸ்வரன் கூறுகையில், திருமண வயதில் உள்ள பிராமண இளைஞர்களுக்கு தகுந்த பிராமண பெண்கள் குறைவாக இருக்கின்றனர் என்றபோதிலும் இது மட்டுமே இந்த நிலைக்கு காரனமல்ல. பிராமண இளைஞர்களின் பெற்றோர் தங்கள் மகனுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற வேண்டும் எனவும் பெரிய திருமண அரங்கில் திருமணம் நடைபெறவேண்டும் என நினைக்கின்றனர். திருமணத்தை கோவிலிலோ, வீட்டிலோ எளிய முறையில் நடத்த முடியாததற்கு காரணம் என்ன?

திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் பெண் வீட்டார் மட்டுமே ஏற்க வேண்டும் என்பது முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. பிராமண சமூகம் முன்னேற்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் பிற்போக்குத்தனத்தை நிராகரிக்க வேண்டும். இந்த காலத்திலும் கூட திருமணத்தை 2 - 3 நாட்களுக்கு நடத்துகின்றனர். இதில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் நடக்கும் வைபவங்கள், ரிசப்ஷன், மண்டபம், சாப்பாடு, நகைகள் என மிக எளிதாக 12 முதல் 15 லட்ச ரூபாய்க்கு பெரிய செலவுப் பட்டியல் வந்துவிடுகிறது.

உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் இதுபோல செலவு செய்து ஆடம்பர திருமணங்களை நடத்துவதால் பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் தான் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். சிலர் தங்கள் வாழ்க்கை முழுதும் சேமித்து வைத்த பணத்தை செலவு செய்கின்றனர். சிலர் வாங்கிய கடனுக்காக வாழ்க்கை முழுதும் கஷ்டப்படுகின்றனர். எனவே உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் முன்மாதிரியாக செயல்படவேண்டும்” என்றார்.

திருமணத்துக்காக வரன் தேடும் பிராமண இளைஞர் ஒருவர் தெரிவித்ததாவது, “தற்போதெல்லாம் தெலுங்கு, கன்னடம் பேசும் பிராமணர்களுடன் தமிழ் பேசும் பிராமணர்கள் திருமணம் செய்வது பரவலாகிவிட்டது. முன்பெல்லாம் இது சாத்தியப்படாத ஒன்று. ஏற்கனவே வட இந்திய மற்றும் தமிழ் பிராமணர்களிடையே பெற்றோர் பேசி முடிக்கும் திருமணங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. அவ்வளவு ஏன், வைணவ பிராமணர்கள் முன்பெல்லாம் வடகலையை சேர்ந்தவர்கள் தென்கலை பிராமணர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால் இன்று அது சகஜமாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: