வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழுவினை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 11-11-2021 அன்று ஆணையிட்டிருந்தார்கள்.
இதன்படி, இக்குழு, உடனடியாக 12-11-2021 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 13-11-2021 அன்று டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நேற்று (15-11-2021),கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
இந்நிலையில், இன்று (16-11-2021), பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தனர். இக்குழுவின் அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
விரிவான ஆலோசனைக்குப் பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.
அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும்,
நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் பின்வருமாறு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூபாய் 300 கோடி வழங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக