திங்கள், 15 நவம்பர், 2021

அமித் ஷா கூட்டிய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக பொன்முடி பங்கேற்பு!

  Asianet Tamil  - Tirupati  :  மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா திருப்பதியில் கூட்டிய தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருப்பதியில் 29-ஆவது தென் மண்டல கவுன்சில் (தென் மாநில முதல்வர்கள்) கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற முதல்வர்கள் இக்கூட்டத்தில் அமித்ஷா தலைமை வகித்தார். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அமித்ஷா பேசுகையில், “தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரம், மரபுகள், மொழிகள் ஆகியவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன. 

தென்னிந்திய மாநிலங்களின் முக்கியமான பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனை செய்துக்கூடப் பார்க்க முடியாது
இந்தியாவில் உள்ள எல்லா பிராந்திய மொழிகளையும் மோடி அரசு மதிக்கிறது. எனவேதான் இன்றைய தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்ள மாநிலங்களின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 வருங்காலத்தில் பிரதிநிதிகள் தங்கள் மாநில மொழியில் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவேன். தற்போதைய நிலவரப்படி 111 கோடி தடுப்பூசி அளவை அடைய முடிந்துள்ளது. இது ஒரு பெரிய சாதனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியின் எடுத்துக்காட்டாகும். நாட்டில் அனைத்து சுற்று வளர்ச்சியையும் அடைய கூட்டாட்சியை மேம்படுத்துவதே பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும்.

கொரோனா தொற்றுநோயை​இந்தியாவால் சமாளிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், மோடி தலைமையில் இந்தியா சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை விரைவாக அதிகரித்தது. இன்று, தொற்றுநோய் பற்றிய அச்சத்தை கடந்துவிட்டோம்.” என்று அமித்ஷா பேசினார்.  நிறைவு நிகச்சியில் அமித்ஷா பேசுகையில், “கோவிட் இரண்டாம் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தி, முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும். முதல்வர்கள் போதை, புகை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வை இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படுத்த முன்னுரிமை வழங்க வேண்டும். போஸ்கோ கிரிமினல் குற்றங்களை பூஜ்ஜிய அளவுக்குக்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று அமித்ஷா பேசினார்.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவரால் பங்கேற்க முடியவில்லை. அவர் சார்பில் மூத்த அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இதேபோல் கேரளா, தெலங்கானா சார்பிலும் அமைச்சர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை: