BBC : பிபிசி தமிழ் : மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கோரியபடி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக சித்தரிக்கும்போக்கு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் மரணமடைந்த மாணவியின் வாட்ஸ்அப் உரையாடல்களை சிலர் வெளியிட்டுள்ளனர்' என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்தியாலயாவில் பிளஸ் 1 படித்து வந்தார்.
அந்தப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனால், நேற்று சனிக்கிழமை அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் அவ்வப்போது பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புகளின்போது ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவியிடம் அத்துமீறியதாக மாணவியின் சக பள்ளி நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு பூமார்கெட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்து வந்தார் குறிப்பிட்ட மாணவி. ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இறந்துபோன மாணவிக்கும் ஆசிரியர் மிதுனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என்று கூறப்படும் ஆடியோ பதிவுகள் கசிந்துள்ளன. அந்த உரையாடல்களில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீசார் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
வீட்டு வாடகை கேட்டதற்கு பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் காவல் ஆய்வாளர்
கன்னியாகுமரியில் கன மழை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 26 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி அடைக்கப்பட்டார்.
அதேநேரம், `மாணவி புகார் அளித்தபோதே பள்ளி முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது' எனக் கூறி ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரையில் மாணவியின் உடலை வாங்க மாட்டோம்' எனக் கூறி அரசு மருத்துவமனையை அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதனை எதிர்பார்க்காத போலீஸ் அதிகாரிகள் மாணவியின் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவை எதுவும் பலன் அளிக்காத நிலையில், பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சனிக்கிழமையன்று கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
குறிப்பாக, மாணவி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யத் தவறியதற்காக போக்சோ சட்டப்பிரிவு 21ன்கீழ் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் தலைமறைவானதால் அவரைப் பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த தேடுதல் பணியில் ஞாயிறு காலை பெங்களூருவில் வைத்து மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாணவியின் மரணம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஓர் உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமலிருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கைகளும் சமூக அமைப்புகள் நடத்திய இடைவிடாத போராட்டங்களுமே பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான அழுத்தத்தை தந்ததாக, சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இரவு நடந்த மெழுகுவர்த்தி பேராட்டமும் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராதிகா, `` கடந்த காலங்களில் பாலியல் புகார்கள் வந்தால், அதில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மட்டும்தான் கைது செய்யப்படுவார். பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால், கோவை மாணவி விவகாரத்தில் பள்ளி முதல்வரை கைது செய்துள்ளதை வரவேற்கிறோம். தற்போது விசாரணை நல்லமுறையில் நடைபெற்று வருகிறது" என்கிறார்.
மாணவி மரணத்துக்கு நீதிகேட்டுப் போராட்டம்.
பாலியல் தொல்லையால் இறந்து போன மாணவியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளிவருவது குறித்துப் பேசிய ராதிகா, `` இந்தச் சமூக அமைப்பில் பெண்களை குற்றவாளியாக சித்தரிக்கும்போக்கு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் வாட்ஸ்அப் உரையாடல்களை சிலர் வெளியிட்டுள்ளனர்" என்கிறார்.
மேலும், `` அண்மையில், `பெண்கள் உருவாக்கம்' தொடர்பாக மாநில அரசு கூட்டம் ஒன்றையும் நடத்தியது. அந்தக் கூட்டத்தில், `பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தடுப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். தனியார் கல்வி நிறுவனங்களில் அதுபோன்ற கமிட்டிகளை அமைப்பது கிடையாது. அப்படியே அமைத்தாலும் பள்ளி நிர்வாகத்துக்கு வேண்டிய ஆட்களே நியமிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற கமிட்டிகளில் வெளியில் இருந்து ஆட்களை நியமிக்க வேண்டும். இந்தக் கமிட்டிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும். அந்தக் கமிட்டிகளில் யார் உள்ளனர், என்ன புகார் வந்துள்ளது என்பதை முறைப்படுத்துவதற்கு இவையெல்லாம் அவசியம். இதற்கான வழிகாட்டல்களை உறுதியாக அரசு அமல்படுத்த வேண்டும். காரணம், தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ எந்தவித கட்டுப்பாடுகளுக்குள்ளும் வருவது இல்லை" என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக