ஞாயிறு, 14 நவம்பர், 2021

செல்ஃபி.. தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்.. உடல்கள் மீட்பு .. சிலர் காப்பாற்றப்பட்டனர்

செல்ஃபி: தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்!

மின்னம்பலம் : வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையின் காரணமாகத் தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தாலும், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆற்று பகுதிக்கு சென்று செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மழை காரணமாகக் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்த எச்சரிகையை மீறி, கடலூர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மாதவன்,மாளவிகா ஆகிய இரட்டையர்களும், மற்றும் அவர்களது சித்தப்பா மகன் லோகேஷ் என்ற 15 வயது சிறுவனும் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் செல்ஃபி, வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

3 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்படுவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அதுபோன்று தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அலறி அடித்துக் கொண்டு கிராம மக்களே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் குவிந்தனர்.

இந்தசூழலில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவரது உடலை முட்புதரில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணிநடந்து வருகிறது.

இந்த சம்பவம் முள்ளிகிராம்பட்டு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

3 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பகுதி நெல்லிக்குப்பம் மற்றும் தூக்கனபாக்கம் ஆகிய இரு காவல் நிலைக்கு எல்லைக்குட்பட்டு வருவதால் எந்த காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்து மாமண்டூர் கிராமம் அருகே பாலாற்றில் பாலாற்றில் குளிக்கச் சென்ற போது, மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதன்(18 ), நந்தகுமார் (18), சின்னராசு (18 ), சுபாஷ் (20), ரமேஷ் (20), கோகுல் (20), நாதன் 20 ஆகிய ஏழு இளைஞர்கள் பாலற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து ரப்பர் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டது. அதுபோன்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் ஆற்றின் நடுவே வெள்ளநீரில் சிக்கித் தவித்த 7 பேரையும் மீட்டு மீட்புக் குழு கரைக்கு அழைத்து வந்தது.

-பிரியா

கருத்துகள் இல்லை: