வியாழன், 18 நவம்பர், 2021

அதிமுக - ராஜேந்திர பாலாஜி மீது ஐ.பி.சி. 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு புகார்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனான ஆனந்துக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பியிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளார்.
வேலை வாங்கித்தராத நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தை திருப்பிக்கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், அதன் மீது விசாரணை நடத்தினர்.


அந்த விசாரணையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயநல்லத்தம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் இந்தப் புகாரில் தொடர்பிருப்பதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவர் மீதும், மோசடி உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 3 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜயநல்லதம்பி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் முத்துபாண்டி, பாபு ராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீது 406, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயநல்லத்தம்பி, ராஜேந்திர பாலாஜி மீது ரூ. 3 கோடி மோசடி புகார் தெரிவித்தபோது, அதுகுறித்து “எளிய குடும்பத்தில் பிறந்த நான், அரசியலில் பொதுநல சிந்தனையோடு பணியாற்றிவருகிறேன். உள்ளாட்சி பொறுப்பு வகித்தபோதும், அமைச்சராக இருந்தபோதும், சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதே இல்லை. நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பது என்னோடு பழகியவர்களுக்கும், நான் பெரிதும் மதிக்கும் தொண்டர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறேன். ஆனால், திட்டமிட்டே அவதூறு செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. விஜய நல்லதம்பி என்ற மோசடி பேர்வழி மீதுள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விருதுநகர் மாவட்டம் மட்டுமல்ல.. தமிழகமே நன்கறியும். அவருக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். இதற்கு முன் பல கட்சிகளில் இருந்தபோதும், தன் மீது புகார் வரும்போது யாராவது ஒரு விஐபி மீது பழி சுமத்துவதை, விஜய நல்லதம்பி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இவர் போன்றவர்களிடம் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்று ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘என் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் மீது 8க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: