புதன், 17 நவம்பர், 2021

சேலம் சங்ககிரி தலித் இளைஞர் மோகன்ராஜ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு- வன்னிய ஜாதி ஆணவக்கொலை...

தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மரணம்: தண்டவாளத்தில் சடலம்  கண்டெடுப்பு! (படங்கள்) | dharmapuri, Elavarasan death, lover divya

Mathivanan Maran   -  Oneindia Tamil :  சேலம்: சேலம் அருகே சங்ககிரி ஒன்றியம் தட்டாபட்டியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த, ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் மோகன்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் மோகன்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆதிக்க ஜாதியினர் படுகொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் இளவரசன் மரண விவகாரம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதை மறக்க முடியாது.
நாயக்கன்கொட்டாயை சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன், அதே பகுதியில் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் திவ்யாவின் தந்தை தற்கொலை கொண்டார். இதனால் இரு சமூகங்களிடையே வன்முறை வெடித்தது. தலித் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

தற்போது இதே போன்ற சம்பவம், சங்ககிரி அருகே நடைபெற்றிருக்கிறது. சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தட்டாபட்டி அருந்ததியர் தெருவில் வசித்தவர் இளைஞர் மோகன்ராஜ். இவர் தாரமங்கலத்தில் மற்றொரு சமூகத்தைச் சார்ந்த சித்ரா என்ற பெண்ணை காதலித்து கடந்த 12.11.2011 அன்று ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சித்ராவின் பெற்றோர் தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு மோகன்ராஜை அழைத்து போலீசார் உதவியுடன் அடித்து சித்திரவதை செய்து காவல்துறையின் துணையோடு இருவரையும் பிரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் மோகன்ராஜிடம் இருந்து சித்ராவை பிரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு மோகன்ராஜை போலீசார் ஜாதி ரீதியாக அடித்து துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை மோகன்ராஜூம் அவரது குடும்பத்தாரும் வேறு யாரிடமும் சொல்லாமல் மிகுந்த மனவேதனையில் விரக்தியில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை சங்ககிரி மாவடி பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் மோகன்ராஜின் சடலம் கிடந்துள்ளது.

இந்த தகவல் கிடைத்தவுடன் ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். மேலும் மோகன்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆதித் தமிழர் பேரவையினர் கூறுகின்றனர். இதனிடையே இறந்துகிடந்த மோகன் ராஜன் டைரியில் உள்ள கடிதத்தில் மற்றொரு சமூகத்தைச் சார்ந்த நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக அவர்களை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்று காவல்துறையை ஆதித் தமிழர் பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சங்ககிரி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை: