வெள்ளி, 26 மார்ச், 2021

பங்களாதேஷில் மோடிக்கு எதிர்ப்பு..போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு

tamil.oneindia.com - elmurugan P : டாக்கா: பங்களாதேஷில்  பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் இன்று ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது,
கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார்.
இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் பிரதமர் மோடி டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
பங்களாதேசின்  50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக டாக்கா வந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


பங்களாதேசின் பிரதமர் ஷேக் ஹசினா, விமான நிலையத்துக்கு வந்திருந்து பிரதமர் மோடிக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார்கள்.
மோடிக்கு எதிர்ப்பு மோடிக்கு எதிர்ப்பு இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு வங்க தேசத்தில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் இன்று மோடியின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக மோடி அரசு அடக்குமுறைகள் நடத்துவதாக குற்றம்சாட்டியும், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து போராட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இன்று பங்களாதேசத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைக்க முயன்றனர்.
அதன்பின்னர் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிரான போராட்டங்கள் தலைநகர் டாக்காவிலும் பரவியுள்ளன, அங்கு இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட மக்கள் போலீசாருடனான மோதல்களில் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: