திங்கள், 22 மார்ச், 2021

திமுக வெற்றிக்கு எது உதவும்? - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவுகள் Pre Poll Survey 2021

 

Ganesh babu :  

புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு - ஒரு அலசல்!
இந்தியாவின் First-past-the-Post தேர்தல் முறையில், 5-6% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பிரம்மாண்டமான வெற்றி உறுதி என்று பல நிபுணர்கள் ஆதாரப்பூர்வமாக வாதிடும் நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பின் முடிவில் அ.தி.மு.கவை கூட்டணியைவிட தி‌.மு.க கூட்டணி 10% கூடுதலாக வாக்குகளை பெறும் என்று வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து தி.மு.க அணி 151 முதல் 159 இடங்களை வெல்லும் வாய்ப்புள்ளது என்றும் அந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அந்தக் கருத்துக்கணிப்பையொட்டி நடந்த நேரலை கலந்துரையாடலில், "இந்த 10% வாக்கு வித்தியாசம் என்பது வரும் நாட்களில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இந்த 10% தான் இறுதியென்று வைத்துக்கொண்டாலும்கூட தி‌.மு.க அணி குறைந்தது 180-185 இடங்களை வெல்லும்" என்று மூத்தப் பத்திரிகையாளர் 'தி ஹிந்து' என்.ராம் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களும் பதிவு செய்தனர். நிற்க
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இந்தக் கருத்துக்கணிப்பிற்கான சர்வேயில் நேரடியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சேர்க்கப்படவில்லை. 
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை எல்லாம் இணைத்தவர்கள் அதே வரிசையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இணைக்கவில்லை. ஆகவே, இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் அ.தி.மு.க கூட்டணி வாங்கப்போவதாக அவர்கள் கணித்துள்ள வாக்கு சதவீதத்தில் அ.ம.மு.கவின் வாக்குகளையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கண்டித்து அ.ம.மு.க நபர் ஒருவர் நேரலை விவாதத்திலிருந்து வெளியேறினார். அது அவரது உரிமை.
ஆனால் நான் சொல்ல வருவது வேறு. மேலோட்டமாக பார்த்தால் அ.தி.மு.கவின் வாக்கு சதவீதத்தை மிகைப்படுத்திச் சொல்வதற்காகவே இவர்கள் அ.ம.மு.க விசயத்தில் இப்படி செய்திருக்கக்கூடும் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இதன் பிண்ணனியில் அதைவிட சீரிஸான திட்டம் ஏதேனும் இருக்குமோ என்று எனக்கு கேள்வி எழுகிறது.
இந்தத் தேர்தலில் தனிக்கட்சியாக களம் காணும் அ.ம.மு.கவை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் கருத்துக்கணிப்பை வெளியிட்டதன் மூலம் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தொண்டர்கள்/அனுதாபிகள் ஆகியோர் அ.தி.மு.கவுக்குதான் வாக்களிப்பார்கள் அல்லது வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை செய்யும் நோக்கம் இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன். பச்சையாக ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு சார்பான அணுகுமுறை இது என்பது அரசியல் அறிந்து யாரும் ஒப்புக்கொள்வார்கள். அரசியல் கருத்துக்கணிப்பு முறையின்படியும், அடிப்படை அரசியல் நெறிமுறையின்படியும் இது மிகப் பெரிய பிழையாகும்.
சுருக்கமாக சொல்லப்போனால் களத்தில் நடக்காத அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பை இவர்கள் காகிதத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் தகிடுதத்தங்கள் செய்தும்கூட தி.மு.க 10% கூடுதலான‌ வாக்குகளைப் பெறும் என்றுதான் முடிவுகள் வந்திருக்கிறது என்றால், உண்மையில் இது இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.
ஆகவே 10% வாக்கு வித்தியாசம் இருந்தாலே 180-185 இடங்களுக்கு குறையாமல் தி.மு.க அணி வெல்லும் என்று அரசியல் அறிஞர்கள் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், வாக்கு வித்தியாசம் 15-17% என்று வரும் சூழலில் தி.மு.க கூட்டணி 234 இடங்களையும் முற்று முழுவதுமாக வென்றால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை!! 🖤❤️
- Ganesh Babu

கருத்துகள் இல்லை: