செவ்வாய், 23 மார்ச், 2021

வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுத்து, ஆட்டோவில் பிணமாகக் கிடந்த நடிகர்

tamil.samayam.com : ஆட்டோவில் இறந்து கிடந்த காதல் படம் புகழ் பாபு

 பட வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுத்து வந்தார் இவர்  பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்டோர் நடித்த காதல் படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் சந்தியா மட்டும் பிரபலமாகவில்லை பல்லு பாபுவும் பிரபலமானார். காதல் படத்தில் விருச்சககாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த விருச்சககாந்த் என்கிற பெயர் பட்டிதொட்டி எல்லாம் ரீச்சானது. காதல் படத்திற்கு பிறகு பாபுவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போக, செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தெருத் தெருவாக பிச்சை எடுத்து சாப்பிட்டிருக்கிறார் பாபு. அவரின் பரிதாப நிலை குறித்து அறிந்த நடிகர்கள் சாய் தீனா, அபி சரவணன் உதவி செய்துள்ளனர்.லாக்டவுன் நேரத்தில் நன்றாக சம்பாதித்த பலரின் நிலைமையே படுமோசமானது. அப்படி இருக்கும்போது பிச்சை எடுத்து வந்த பாபுவின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டு, ஏதாவது ஒரு இடத்தில் தூங்கி வந்திருக்கிறார்.

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இந்நிலையில் ஆட்டோவில் தூங்கிய பாபு அப்படியே இறந்துவிட்டார். அவரின் மரண செய்தி அறிந்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு நடிகராக இருந்து, இப்படி பிச்சை எடுத்து, யாரும் இல்லாதவராக ஆட்டோவில் இறந்து கிடந்திருக்கிறாரே, இது என்ன கொடுமை என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

பாபுவின் பரிதாப நிலை குறித்து முன்பே தெரிந்திருந்தால் நாங்கள் யாராவது உதவி செய்திருப்போமே என சினிமா ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.
 

முன்னதாக தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். லாக்டவுன் நேரத்தில் அவரின் நிலைமையும் மோசமானது. தன் பிள்ளைகளை நினைத்தே கவலையில் இருந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் போக பரோட்டா கடையில் வேலை பார்த்தார் தீப்பெட்டி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: