திங்கள், 22 மார்ச், 2021

விடுதலைச் சிறுத்தைகளுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person and text that says 'நமது சின் னம் னம் பானை'

மின்னம்பலம் : திமுக கூட்டணியில் ஆறு இடங்களைப் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
இவற்றில் திருப்போரூர் தொகுதியில் நேரடியாக பாமகவோடும், மற்ற தொகுதிகளில் அதிமுகவோடும் மோதுகிறது விடுதலைச் சிறுத்தைகள். திமுக கூட்டணியில் 6 தொகுதிகளைப் பெற்ற மதிமுக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது என்று முடிவெடுத்த நிலையில், விடுதலை சிறுத்தைகளோ தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துத் தேர்தலை சந்திக்கிறது.


இதன்படி ஆறு தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தைத் தரும்படி தேர்தல் ஆணையத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் வைத்திருந்தது. இந்நிலையில் வேட்பு மனு பரிசீலனையைத் தொடர்ந்து இன்று போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் நின்று வென்றிருந்தார். ஏற்கனவே வெற்றிபெற்ற சின்னமான பானை சின்னம் மீண்டும் கிடைத்ததில் விடுதலை சிறுத்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பானை சின்னம் கிடைத்ததும் அதை அறிமுகப்படுத்திய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், “பானை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களே இருக்கின்றன. இந்த 13 நாட்களுக்குள் பானை சின்னத்தை நாம் மக்களிடம் கொண்டு சேர்த்து இதை வெற்றிச் சின்னமாக ஆக்க வேண்டும். அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாகக் களமாட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: