புதன், 24 மார்ச், 2021

‘கள்’ குறித்து ஏன் கள்ளமெளனம் சாதிக்கின்றன கட்சிகள்?

காட்சன் சாமுவேல் - aramonline.in : டாஸ்மாக் மதுவை எதிர்த்துப் போராடி மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏதேனும் வாக்குறுதி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. டாஸ்மாக் மதுவில் ஆல்ஹாகால் 42% உள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு தான் கள்ளில் உள்ளது. ஆகவே, டாஸ்மாக்கிற்கு மாற்றாக பனங் கள்ளை பயன்படுத்த அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது என்பதை இந்த கட்டுரையில் அலசுவோம்.

சங்க இலக்கிய கால கட்டத்திலிருந்து கள் என்னும் பானம் தமிழர்களின் அன்றாட வாழ்விலும், விழாக்களிலும், சமயச் சடங்குகளிலும்,  போர்ச்சூழலிலும் பின்னிப் பிணைந்திருந்திருக்கிறதை நாம் காண்கிறோம். திருக்குறளை முன்னிறுத்தி கள்ளுண்ணாமையை உயர்த்திப்பிடிப்பவர்கள், கள்ளுண்டு ஆத்திச்சூடியை வழங்கிய தமிழ் பாட்டி ஓளவையினை மறந்து போகிறார்கள். கடந்த 34 ஆண்டுகளாக கள் தடை தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கும் அழிவு என்பது பன்முகப்பட்டது. கிராம பொருளாதாரம், சித்த மருத்துவம், தொல் சடங்குகள், ஊட்டச்சத்து குறைபாடு, மக்கள் புலம் பெயர்தல், வாழ்வாதார சிதைப்பு, பனங்காடுகள் அழிப்பு, என இழந்தவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

2021 சட்டமன்ற தேர்தலில் “கள் – கதநாயகனாக” செயல்படும் என்று கள் ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கள் தடை நீக்கவேண்டும் என பனைதொழிலாளர்களும், சித்த மருத்துவர்களும், பனை உணவினை முன்னிறுத்தும் பனை ஆர்வலர்களும், சூழியல் செயல்பாட்டாளர்களும்,  நுகர்வோர்களும் தங்கள் கருத்துக்களை கள்ளுக்கு சாதகமாக தொடர்ந்து முன்னிறுத்திவந்தனர். ஆகவே  தமிழகத்தில் 2021 சட்ட மன்ற தேர்தலை எதிகொள்ளும் கட்சிகள், கள் தடை நீக்கம் குறித்து கருத்துடன் பரிசீலிப்பார்கள் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. இயற்கை, மரபு, வாழ்வாதாரம், வணிகம், மருத்துவம், நுகர்வோர் என்ற வாக்கு வங்கியினை ஒன்றிணைக்கும் புள்ளியாக கள் இருக்குமே என்பதால் தான்.

பனை, தென்னையில் கள் இறக்க வேண்டி கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர், செ. நல்லுசாமி. அவர் இயக்கத்தின் வேண்டுகோளை அரசியல் கட்சிகள் பொருட்படுத்தவில்லை. பனை பயன்பாட்டால் கிராமத் தொழில்கள் மறுமலர்ச்சி அடையும். பனையில் அடி முதல் நுனி வரை 800 க்கு மேற்பட்ட பயன்பாடுகள் உள்ளது.  தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமே அது தான்!

நாம் தமிழர் கட்சி பனையும் பனை சார்ந்த பொருட்களையும் தொடர்ந்து முக்கியத்துவப்படுத்திவரும் ஒரே கட்சியாக பார்க்கப்பட்டது.  கள் குறித்து மிக அதிகமாக பேசவும், பரப்புரையும் அவர்கள் செய்தனர். ஆனால் கள் என்பது மது என்ற அளவில் அவர்கள் பேசுவது, கள் சார்ந்த முழுமையான புரிதலற்ற தன்மையினை வெளிப்படுத்துகிறது. சங்க இலக்கிய காலத்திலிருந்து இன்றுவரை வார்த்தையோ ஒலி அமைப்போ மாறாத கள் என்ற சங்க இலக்கிய கால கட்ட வார்த்தையினை முழுவதுமாக கைவிட்டு, பனம் பால் தென்னம் பால் என்று அவர்கள் கூற முற்படுவது, தமிழர் அடையாளத்தின் மீது தாங்களே கொண்டுள்ள எதிர்மறை கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, “தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்ப பனை விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும்” கூறியிருக்கிறார்கள். இன்று பனையேறி தான் இறக்கிய கள்ளினை பனை மரத்தடியிலேயே விற்றுக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறான். சுதேசி குறித்து பேசும் பா ஜா கா, உள்ளூர் – தன்னிறைவு குறித்து பேசாமல், வெளிநாடுகளுக்கு இவைகளை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறுவது நகைப்புக்குறியது. பாஜக பேசும் சுதேசி கொள்கை உண்மை என்றால், முதலில் அது கள் தடையை நீக்க முன்வர வேண்டும்.

மதிமுக தலைவர் வைகோ முதலில் கள்ளுக்கு ஆதரவு தெரிவித்து பல இயக்கங்கள் நடத்தியவர். தெற்குச் சீமை மக்களின் ரத்தத்திலும்,சித்தத்திலும் இரண்டற கலந்தது பனைத் தொழில்! அது கள் தடையால் நசிந்து போயுள்ளதை அவரும் அறிவார். ஆனால், ஏனோ, அவரும் பின்வாங்கிவிட்டார்.

2018 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை ஒட்டி தொல். திருமாவளவன் தனது கட்சியினர் கண்டிப்பாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை நடவேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்தார். தமிழகத்தில் எந்த கட்சியும் இவ்வகையான ஒரு கள போராட்டத்தை அதுவரை நிகழ்த்தியிருக்கவில்லை. இதற்கென தொல். திருமாவளவன் அவர்கள், களமிறங்கி செயல்பட்டார். தமிழகமே விடுதலை சிறுத்தைக் கட்சியினை நம்பிக்கையோடு திரும்பி பார்த்தது. இச்சூழலில், வி. சி. கா செய்யத் தவறியது என்ன? தங்கள் கட்சியிலிருக்கும் பனை சார்ந்த தொழிலாளர்களையோ, கலைஞர்களையோ தொகுக்க முன்வரவில்லை.  விடுதலை சிறுத்தைகள் கட்சி கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை இந்த தேர்தலில் பேசியிருந்தால், கள் குறித்த புரிதல் சாமானியர்களை சென்றடைந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சியானது தங்கள் கொள்கை அளவில் காந்திய நோக்கு கொண்டது. குமரி அனந்தன் போன்ற மூத்த  தலைவர்கள் சிலருக்கு டாஸ்மாக் மதுவை சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால், பனைத் தொழிலை மீட்க கள் தடை நீக்கப்பட வேண்டும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.  இது தான் காங்கிரஸ் தமிழகத்தில் பலவீனப்படக்  காரணம்.  ஆனால் நவீன காந்தியவாதிகளைப் பொறுத்த அளவில் கள் என்பது  காந்தி வலியுறுத்திய கிராம பொருளாதாரம் மற்றும்  வாழ்வியலின் அங்கமாகவே பார்க்கிறார்கள். கட்சி அளவில், கள் குறித்த பேச்சுகள் இன்னும் மேலெழவில்லை. பனை வளம் தமிழகத்தில் அழிக்கப்பட்ட வரலாறு ஏற்கனவே அறம் இணைய இதழில் எழுதப்பட்டுள்ளது.

இன்று எதிர்கட்சியாக இருக்கும் தி மு க, மற்றும் ஆட்சியில் இருக்கும் அ இ அ  தி மு க போன்ற கட்சிகள் கள் குறித்த சரியான நிலைப்பாடு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்விரு கட்சிகளும் கள் சார்ந்து பெரு மவுனம் காக்கின்றன. அதற்கு காரணம் அவர்கள் கைவசமிருக்கும் மது ஆலைகள் மற்றும் ’பார்’ நடத்துவதில் அந்தக் கட்சிக்காரர்கள் அடையும் ஆதாயங்கள்! பனை என்ற கற்பகத் தருவை கள் என்ற ஒற்றைப் பார்வையில் பார்ப்பது பெரும் பிழையாகும்! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை செய்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்! இந்த வலி லட்சக்கணக்கான பனை விவசாயிகளுக்கும், பனையேறிகளுக்கும் ஆழமாக உள்ளது. இதை  அரசியல் கட்சிகள் உணர்ந்துகொள்ளவில்லை.  கள் தடை நீக்கம் குறித்து இவர்கள் பேசாதிருப்பதைப் பார்க்கையில், தமிழகம் இவர்களை நம்புவதில் இனியும் பொருளில்லை. பனையேறிகளையும் அவர்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுகிறோம் எனச் சொல்லி இவர்கள் அளித்திருக்கும் வாக்குறுதிகளையும், பனையேறிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் எவ்வகையிலும் நாம் பொருட்படுத்தலாகாது.

மக்கள் நீதி மையம் தனது தேர்தல் அறிக்கையில், “கள்ளை தடை செய்யும் சட்டம் நீக்கப்படும். அதை உணவு பானமாக அறிவிக்கப்படும்” என்ற வரி உள்ளது. இது பனங்கள் சார்ந்த ஒரு முழுமையான உணர்வை கடத்திவிடக் கூடியதாக இருக்கிறது. கமலஹாசன்  பனையேறிகளின் அடிநாதமான கோரிக்கையின் பின்னால் உள்ள உண்மையினை உணர்ந்திருக்கிறார் என்பது ஒரு வகையில் மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. ஆனால் கள் விற்பனையினை  பனியேறிகளே முன்னின்று நடத்துவார்கள் என்கிற உறுதியினை அவரால் தர இயலவில்லை  என்பது நமக்கு மிகப்பெரும் சோர்வை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.  இப்படி இங்கு வாழும் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியல் தேவைகளை புரிந்து கொள்ளாமலும், அவர்கள் நாடித்துடிப்பை அறியாமலும்  இங்கிருக்கும் கட்சிகள் செயல்படுமாகில் அவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்கிற கேள்வி எழும்புகிறது.

பனையேறிகளும் அவர்கள் குடும்பத்தினரும், இப்போது உங்களை நாடி வருபவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இருக்கிறது. பனங்கள் என்பது உணவா? மதுவா? அல்லது பொதுத் தளத்தில் பேசவே கூடாத போதைப்பொருளா? கள்ளைக் குறித்து கள்ள மவுனம் சாதிக்கும் கட்சிகளுக்கு இருக்கும் “மது ஆலை போதையும்” “எளியவர்களை நசுக்கும் போக்கை”யும் எப்படி எடுத்துக்கொள்ளுவது?

கடந்த 5 ஆண்டுகளாக பனை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் பெருமளவில் ஏற்பட்டதால், இன்று குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளின் தேர்தல் வரைவு திட்டத்தில் ஓரளவு இடம் பிடித்தது. ஆனால், கள் குறித்த நிலைப்பாடுகள் எடுக்காத பெருங்கட்சிகள், வருங்காலத்தில் உணர்த்துகொள்ளுவார்கள். அச்சூழலில் தமிழக அரசியல் களம் முற்றிலும் புதிதாய் மாறியிருக்கும்.

கட்டுரையாளர்;

 காட்சன் சாமுவேல்;

பனை வளத்தை மீட்பது குறித்து இடையறாது பேசியும், எழுதியும் வருபவர். தீவிர பனை களச் செயற்பாட்டாளர். இதற்காக நாடு தழுவிய இயக்கமும் நடத்தியுள்ளார். பனை மீட்பை வாழ்வியல் இலக்காக கொண்டு இயங்கி வருகிறார். ஆரே பால் குடியிருப்பு, மும்பை. தொடர்புக்கு; 9080250653

கருத்துகள் இல்லை: