புதன், 24 மார்ச், 2021

பாஜக ஷாக்! அண்மைக் காலமாக ஸ்டாலினின் பிரச்சாரத்தை கவனித்தீர்களா.. அவர் டார்க்கெட்டே வேறு..!

  Velmurugan P - tamil.oneindia.com :   சென்னை: தமிழகத்தில் எந்த தொகுதியிலும் பாஜக வெற்றி பெறப்போவது இல்லை.
ஒருவேளை தமிழகத்தில் எந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றாலும் அது பாஜக வெற்றிபெற்றதாக அர்த்தம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இப்படி பேசியது ராயபுரத்தில்.. எல்லா இடங்களிலும் அதிமுகவை விடவும் பாஜகவை டார்க்கெட் செய்த ஸ்டாலின் பேசி வருகிறார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுகவைவும், அமைச்சர்களையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்து வருவது தொடர்கதையான ஒன்று தான்.
ஆனால் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுகவைவிடவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
பாஜக எங்குமே வெற்றி பெறாது என்று உறுதியாக நம்பும் ஸ்டாலின், அதிமுகவை வெற்றி பெற வைத்தால் பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம் என்று பேசி வருகிறார்

ஸ்டாலின் தாக்கு அதிமுகவை பாஜகதான் மறைமுகமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ஸ்டாலின், நீட் தேர்வு தொடங்கி, சிஏஏ வரை அதிமுகவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது, பாஜகவை டார்க்கெட் செய்துதான் பேசி வருகிறார்.


பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவிடக்கூடாது என்பது தான் ஸ்டாலினின் திட்டமாக உள்ளதாம்.

பாஜக ஜெயிக்கவே கூடாது அதிமுக ஜெயித்தாலும், ஜெயிக்காலும், ஆனால் பாஜக தமிழகத்தில் ஜெயிக்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம்.
பாஜக வேட்பாளர்கள் பலர் திமுகவுடன் நேரடியாக போட்டியில் உள்ளார்கள்.
அங்கெல்லாம் பிரச்சாரத்தை கடுமையாக்கி வருகிறது திமுக.
இந்நிலையில் ராயபுரத்தில் வடசென்னை பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

வடசென்னையில் பிரச்சாரம் வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சங்கர், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ஐட்ரீம் மூர்த்தி,
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் எபினேசர், துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு, மாதவரம் பகுதியில் போட்டியிடும் சுதர்சனம்,
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர், திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் தாயகம் கவி மற்றும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன் ஆகியோரை ஆதரித்து ராயபுரம் மேற்கு மாதா கல்லறை சாலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பாஜக வெற்றி பெற்றதாக அர்த்தம் அப்போது பேசிய ஸ்டாலின், அமைச்சர் ஜெயகுமாரை ஓட ஓட விரட்டவே இங்கு வந்துள்ளேன்.
அவரை சாதாரண தோல்வி அல்ல படுதோல்வி அடைய செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். முந்திரி கொட்டையாக செயல்பட்ட அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிஆர்ஓ வாக செயல்பட்டு வருகிறார்.
மைக்கை பார்த்தால் பேசும் ஜெயகுமார் மக்களை பார்த்தால் பேசமாட்டார்.
அதிமுக ஊழல்கள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படும். தமிழகத்தில் பாஜக ஜெயிக்க முடியாது என்பது வரலாறு. ஆனால் தற்போது அதிமுக ஜெயித்தால் அது அதிமுக வெற்றியாக இருக்காது, பாஜகவின் வெற்றியாகவே தான் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: