புதன், 10 ஜூன், 2020

சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா?

சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா?மின்னம்பலம் : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடத்துக்கான பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இன்டர்னல் அசஸ்மெண்ட் அடிப்படையில் தேர்வு முடிவை அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் சார்பில், வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வரும் காலத்தில் தான் இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று எய்ம்ஸ் தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கும் நிலையில் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தேர்வு மையங்களை அதிகரித்தாலும், வாரிய தேர்வுகளை நடத்துவது மிகப்பெரிய ஆபத்தாகும். தொற்று நோய் அதிகரிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வுகளைப் பல தொழிற்கல்வி நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை என்று கூறி டெல்லி பல்கலைக்கழகம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது.
இதேபோல், நாடு முழுவதும் ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் கூட, நிலைமையைக் கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துள்ளன. மகாராஷ்டிரா அரசு , தனது மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி சிபிஎஸ்இ தேர்வை நடத்தும்போது, மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வது, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பை ரத்து செய்து, மீதமுள்ள பாடங்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: