புதன், 10 ஜூன், 2020

ஜெ.அன்பழகன் என்னை வெளியே போகாதீங்கனு சொன்னார்: ஸ்டாலின்


என்னை வெளியே போகாதீங்கனு சொன்னார்: ஸ்டாலின்மின்னம்பலம் :  ராணுவ வீரரின் தியாகத்துக்கு இணையானது அன்பழகனின் தியாகம் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) உயிரிழந்தார். இந்தியாவிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது இதுதான் முதல்முறை. அன்பழகன் உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பெற்றோர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
அரசின் வழிமுறைகள் காரணமாக மயானம் வருவதைத் தவிர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“எனது இதயத்தில் இடிபோல இறங்கிய செய்தி இன்று காலை வந்தது. எப்போதும் நான் அன்பு, அன்பு என்று அழைக்கும் ஆருயிர் சகோதரன் அன்புவை இழந்து நிற்கிறேன். என்னுடைய இளமைக் காலம் முதலே எனது தோளோடு தோள் நின்ற தோழன் அன்பழகன். தியாகராயர் நகரில் வாழ்ந்த தீரன். கலைஞருக்கு தளபதியாக இருந்த பழக்கடை ஜெயராமனின் மகன்.
தந்தையைப் போலவே சென்னையில் திமுகவின் போர்ப்படை தளபதியாக விளங்கியவர் ஜெ.அன்பழகன். செயல் வீரனாக மட்டுமல்ல சட்டமன்றத்திலும் சிங்கமென கர்ஜிப்பான். அந்த காட்சி இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. எதிர்க்கட்சி வரிசையிலிருந்து அன்பு எழுந்தாலே ஆளுங்கட்சி வரிசையில பயந்து நடுங்குவாங்க. அவருக்கு பதில் சொல்ல பயப்படுவாங்க. தான் நினைப்பதை யாருக்கும் பயமில்லாமல் எடுத்துரைப்பவர்” என்று புகழாரம் சூட்டிய ஸ்டாலின்,
முந்தையை ஆட்சியில் அவரை கைது செய்து ஊர் ஊராக அலை கழிக்கப்பட்டபோது கூட அவரது மன உறுதியைக் குலைக்க முடியவில்லை. தனது உடல்நிலை குறித்து கவலைப்படாமல் தொய்வில்லாமல் பணியாற்றியவர் அன்பழகன். மாபெரும் பொதுக் கூட்டங்களை சென்னையில் நடத்திக்காட்டுபவர்தான் என் அன்பழகன். அவர் போடும் மேடைகளை காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேடைகளும் அவரைப் போலவே கம்பீரமாக இருக்கும். கொரோனா தொற்று காலத்திலும் சளைக்காமல் பணியாற்றினார். என்னை அதிகமாக வெளியே போகாதீங்கன்னு சொல்லிட்டு இருந்தார் என்று நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
> மேலும், “அன்பழகன் உடல்நிலை பற்றியும் எனக்குத் தெரியும். அதனால, அலையாம உட்கார்ந்த இடத்தில இருந்து பணிகளை முடுக்கிவிடச் சொன்னேன். ஆனாலும், எல்லா இடங்களிலும் அவரே போய் நலத்திட்ட உதவிகளை செய்தார். பாழாய்ப்போன கொரோனா என் அன்பழகனையும் தொற்றிவிட்டது. நாட்டுக்காக போராடி உயிரிழந்த ராணுவ வீரனின் தியாகத்துக்கு இணையானது கொரோனா பணியில் பலியான என் அன்பழகனின் தியாகம்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை அன்புவிடம் பேசுவேன். ஆனால், இனி எப்படி அன்புவிடம் பேச முடியும். அவரது குடும்பத்திற்கு, கழக உடன் பிறப்புக்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். எங்கே காண்பேன் என் அன்புவை, எனக்கு நானே எப்படி தேறுதல் சொல்லிக்கொள்வேன். திராவிட இயக்க தீரனின் தியாக வாழ்வைப் போற்றுவோம்” என்றும் உருக்கமாக பேசியுள்ளார் ஸ்டாலின்.
எழில்

கருத்துகள் இல்லை: