வியாழன், 11 ஜூன், 2020

வெளியில் செல்வதை தவிருங்கள் .. தமிழர் மரபு அறக்கட்டளையின் முக்கிய ஆலோசனைகள்

Subashini Thf  : தமிழகத்தில் தற்சமயம் கொரோனா தொற்று என்பது மிகத்
தீவிரமாக பரவி வருவதாகவே செய்தி ஊடகங்கள் வழி அறிகிறேன்.
தமிழக மக்கள் ஒரு விஷயத்தை மிகக் கவனமாக மனதில் பதிய வைக்க வேண்டும். கட்டுக்கோப்புடன்  இக்காலகட்டத்தில் இயங்க வேண்டியது மிக மிக அவசியம். நமது உணவுப் பழக்கம் மிகச் சிறப்பானது என்று மனதில் நினைத்துக்கொண்டு பெருமை பேசிக்கொண்டு அடிப்படை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தாமல் ஏனோ தானோ என்று இருந்து விடும் பழக்கத்தை அடியோடு விட்டு விட வேண்டியது இக்காலகட்டத்தில் மிக மிக அவசியம்.
ஐரோப்பாவில் மார்ச் மாதத்தில் அரசு ஏற்படுத்திய அனைத்து கடுமையான செயல்பாடுகளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடித்ததால் தான் இன்றைக்கு ஐரோப்பாவில் இறப்பு விகிதம் மிகக் குறைந்து வந்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் கூட வேலைக்குச் செல்வது தவிர்த்து வேறு எந்தவிதமான வெளிவிவகார விஷயங்களுக்கும் பொதுமக்கள் வெளியே செல்லாமல் இருப்பது மட்டுமே சிறப்பு.

வீட்டை முடிந்த அளவு மிக மிகத் தூய்மையாக சுத்தப்படுத்தி வையுங்கள்.
கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை இன்று உடனே நிறுத்துங்கள். வீட்டில் இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட நொறுக்குத்தீனி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட கொழுப்பு சத்து அதிகம் கொண்ட உணவு பொருட்கள் ஆகியவை உடல் உறுப்புகளுக்குக் கேட்டை விளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைச் சேர்க்கும் எலுமிச்சை பழம் கொய்யா இஞ்சி பூண்டு முடிந்தால் வாய்ப்பிருந்தால் முட்டை இறைச்சி வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுய கட்டுப்பாடு என்பது இக்கால கட்டத்தில் மிக மிக அவசியம். வெளியில் சென்று மக்களோடு மக்களாக நேரத்தை செலவிடுவதை முற்றுமாக தவிர்த்து விட்டு அடுத்த ஓரிரு மாதங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: