சனி, 13 ஜூன், 2020

ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்.. பீம்சிங்கின் மகன் .. பாரதிராஜாவின் காமிரா கண்கள்


‘பாரதிராஜாவின் கண்கள்’: மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!மின்னம்பலம் : பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50 திரைப்படங்களுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கண்ணன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 40 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படம் தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரையான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கண்ணன் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
கண்ணனை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே திரையுலகில் அழைத்து வந்தார்கள். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனும், முன்னணி எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஜூன் 13) பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது நண்பனின் பிரிவு குறித்து இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்வின் பெரும்பகுதியை என்னுடன் கழித்த, என் துணைவியாரை விடவும் அதிகமாக நான் நேசித்து வளர்ந்த பெரிய ஒளிப்பதிவு கலைஞர் கண்ணன்.
நான் படப்பிடிப்புக்கு என் கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனை ‘இரண்டு கண்களைத்’ தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க தெரியும் என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டுகாலம் என்னுடன் இணைந்து பணியாற்றிய அவரது மறைவை இன்றளவும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இந்த கொரோனாவின் இடுக்குப் பிடியில் சிக்கி அவரது உடலை நேரில் கூட தரிசிக்க முடியாத ஒரு சோகத்தில் இருக்கிறேன். ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, இந்த கலை உலகமே இழந்துவிட்டது. அவரது ஒளிப்பதிவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ‘என்னுயிர் தோழன்’ ஒரு ஸ்லம் பேக்ரவுண்ட். அதற்கு என்ன ஒளிப்பதிவு செய்ய வேண்டும், ‘நாடோடி தென்றல்’ அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், ‘காதல் ஓவியம்’ அது ஒரு காவியம் அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் இந்த வித்தைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்த மிகப்பெரிய கலைஞர்.

என்னோடு அவர் இன்று இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. எனக்குக் கிடைத்த புகழ், இந்த மண், மண் வாசனை, இந்த மக்களுடைய கலாச்சாரம் இவையெல்லாம் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதில் எனக்குக் கிடைத்த புகழுக்கு பெரும் பங்கு என் கண்ணனுக்கு சேர வேண்டும். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று ஒப்புக்காக என்னால் சொல்ல முடியவில்லை. இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை.
உலகத்தமிழர்கள் அத்தனை பேரும் இந்த கலாச்சாரத்தை, பண்பாட்டை ஒளிப்பதிவின் மூலமாக உணர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கு உதவிய அற்புதமான ஒளிப்பதிவு கலைஞனுக்கு, பாரம்பரியமிக்க பீம்சிங்கின் பையன் கண்ணனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா</

கருத்துகள் இல்லை: