வியாழன், 11 ஜூன், 2020

கண்ணீரோடு விடை தருகிறோம்! எஸ்.எஸ்.சிவசங்கர்.

சிவசங்கர் எஸ்எஸ் : எழுந்து நின்று இடுப்பு பெல்ட்டை சரி செய்கிறார் என்றால், அண்ணன் ஜெ.அன்பழகன் சண்டை செய்ய போகிறார், களத்தில் குதிக்கப் போகிறார், தன் பணியைத் துவக்கப் போகிறார் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பார்த்தால், உடல்நிலை பிரச்சினை உள்ளவர் போலவே தெரியாது. துள்ளி எழும் இளைஞனாக காட்சி அளிப்பார்.
எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும், தயக்கமே இருக்காது அவருக்கு, தன் கருத்தை எடுத்து வைக்க. அது ஆளும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகராக இருந்தாலும் சரி. விளைவுகள் குறித்தெல்லாம் கவலைகள் இருக்காது.
அவ்வளவு ஏன், தன் உள்ளம் எல்லாம் நிறைந்த கழகத் தலைவரிடமும் தன் கருத்தை சொல்லி விடுவார், அது எதிர்கருத்தாக இருந்தாலும். ஆனால் அது கழக வளர்ச்சிக்கான கருத்தாகத் தான் இருக்கும்.
சட்டமன்றத்தில், 2011 - 2016 காலகட்டத்தில் அவரோடு பணியாற்றுகின்ற இனிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது, அவரது அதிரடி நடவடிக்கைகளை காணுகின்ற வாய்ப்பு அமைந்தது. அழுந்த திருத்தமாக வாதங்களை வைப்பார். எத்தனை எதிர் குரல்கள் வந்தாலும் தயங்க மாட்டார்.
அப்போது ஜெயலலிதா முதலமைச்சர். இரும்பு பெண்மணியாக எண்ணி, அ.தி.மு.கவினர் அவரை கண்டு அஞ்சி நிற்கும் நேரத்தில், இயல்பாக அவரை எதிர் கொள்வார் அண்ணன் அன்பழகன்.

மானியக் கோரிக்கைகளில் பேசும் போது, தொடர்புடைய துறையின் தவறுகளை பட்டியலிடுவார். இடைமறிக்க, துறை அமைச்சர்கள் எழுந்து நின்றால் அண்ணன் அசரமாட்டார். சபாநாயகர் எச்சரித்தாலும், தன் கருத்துகளை பதியும் வரை விடமாட்டார். அண்ணன் அன்பழகன் எழுந்தாலே, அ.தி.மு.க உறுப்பினர்கள் இருக்கை நுனிக்கு வந்து விடுவார்கள். குற்றம் சாட்டி பேசத் துவங்கினால், ஒட்டு மொத்தமாக கூச்சலிடுவார்கள், அவரை பேச விடாமல் தடுக்க. சபாநாயகர் மைக் இணைப்பை துண்டிக்க உத்தரவிடுவார். அப்போதும் உரத்தக் குரலில் பேசுவார் அண்ணன்.
உடனே சபாநாயகர் சபைக்காவலர்களை அழைத்து, அவரை வெளியேற்ற உத்தரவிடுவார். அப்போதும் விடமாட்டார் அண்ணன் அன்பழகன். கோஷம் எழுப்பிக் கொண்டே தான் காரிடாரை கடப்பார். அவர் பேச எழுந்ததில் இருந்து, அவரை வெளியேற்றும் வரை சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் காணலாம். காளையின் சீற்றம் குறையாமல் இருப்பார் அண்ணன். காளையை அடக்க முடியாமல், தப்பிக்கும் நிலை தான் சபாநாயகருக்கு. அவரை பேச விடாமல் தடுப்பதற்கான காரணம், அரசின் தவறுகளை அண்ணன் அன்பழகன் தைரியமாக பட்டியலிடுவது தான்.
அவரை அடக்க வழி தெரியாமல், அவர் மீது ஒரு பொய்வழக்கும் தொடுத்து பார்த்தார்கள், அந்தக் காலகட்டத்தில். அவரும் அடங்கவில்லை, பொய் வழக்கும் நிற்கவில்லை.
சபையில் முதல்வர் ஜெயலலிதா இருந்தால், அவரது கொந்தளிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அண்ணன் அன்பழகன் எழுந்தாலே, ஜெயலலிதா அவர்கள் முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பிக்கும். ஆனால் அன்பழகன் அஞ்சாமல் பேசிக் கொண்டே இருப்பார். வெளியேற்றி தான் அவர் நேரத்தை முடிப்பார்கள். சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதற்காக, அதிகம் தலைப்பு செய்தியில் இடம்பெற்றவர் அவராகத் தான் இருப்பார்.
2001, 2011, 2016 என மூன்று முறையும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராகவே வெற்றி பெற்றார். கழக ஆட்சியில் அவரை வெற்றி பெற வைத்திருந்தால், அவரது ஆளுமைக்கு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். 2016 வாய்ப்பை இயற்கை பறித்து விட்டது.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாத்திரம் இல்லாமல், கழக மாவட்ட செயலாளராகவும் முத்திரை பதித்தவர். மற்றக் கட்சிகளை விட தி.மு.க மாவட்ட செயலாளராக இருப்பது சிரமம். எந்த நேரத்திலும், பொது நிகழ்வுகளில் களம் இறங்க தயாராக இருக்க வேண்டும். கழகத் தோழர்கள் இல்ல இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். அதிலும் சென்னை மாவட்ட செயலாளர் பணி, மிக சிரமமானது. தினம் நிகழ்ச்சிகள் இருந்துக் கொண்டே இருக்கும். அதிலும் தலைமைக் கழக நிகழ்ச்சிகள் என்றால் மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் அனாயசமாக செய்து முடிப்பார்.
தலைவர் கலைஞர் அவர்கள் காலத்திலும், தலைவர் தளபதி அவர்கள் காலத்திலும் மாநில அளவிலான நிகழ்ச்சிகள், தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை அண்ணன் அன்பழகன் முன்னின்று நடத்தி இருக்கிறார். மேடைகள் அமைப்பதில் துவங்கி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, நிறைவு செய்கிற வரைக்கான பணிகள் ஆயிரம் திருமணங்களை நடத்துவது போன்றது. அதை எல்லாம் சிறப்பாக செய்து, முத்திரை பதித்தவர் அண்ணன் அன்பழகன் அவர்கள்.
கழகம் துவங்கியதில் இருந்து தியாகராய நகர் பகுதியில், போர்ப்படை தளபதி போன்று செயல்பட்டவர் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள். அவரது மகனான அண்ணன் அன்பழகன் அவரை போலவே அடிமட்டத் தொண்டராக கழகப் பயணத்தை துவங்கியவர்.
பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என பணி தொடர்ந்தவர். மாறி வரும் காலத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொள்பவர். சமூக வலைதளம், தொலைக்காட்சி பேட்டி என எல்லாவற்றிலும் பிரகாசித்தவர்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு செல்லப் பிள்ளை அண்ணன் அன்பழகன். தலைவரை தனது தந்தை இடத்தில் வைத்து தான் நடந்து கொள்வார். எதிர்கருத்து இருந்தால்,"இல்லப்பா..." எனத் துவங்கி மனதில் பட்டதை சொல்லி விடுவார். தலைவர் தளபதி அவர்களை உடன் பிறந்தவர் போலவே கருதி பேசுவார் அன்பு. தளபதி அவர்களும், "அன்பு, உங்க கருத்து என்ன?", எனக் கேட்பார். ஒரு ஜனநாயக இயக்கத்தின் தலைவர்களுக்கும், தளகர்த்தருக்குமான மகத்தான உறவு அது.
சட்டமன்றத்தில் அண்ணன் அன்பு கொந்தளிக்கும் நேரத்தில், தளபதி அவர்கள் ஒரு அன்பான புன்னகை சிந்தி," இருங்க அன்பு", என்று கையமர்த்தினால் மாத்திரமே கட்டுப்படுவார். தொண்டருக்கான கட்டுப்பாடு அது.
தனக்கு உடல் நலனில் பிரச்சினை இருப்பதை, கொரோனா கால பேட்டியில் குறிப்பிடுகிறார். ஆனால் அதைத் தாண்டி தொகுதி மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது முக்கியம் என்பதால் பணியாற்றினார். மக்கள் பணியாருக்கான உணர்வு அது.
மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் போல் மக்கள் பிரதிநிதிகளும் முன்னணி கள வீரர்கள் என்ற அடிப்படையில் தி.மு.க ஒரு எதிர்கட்சியாக களத்தில் மக்களுக்கு உதவி வருகிறது. அதன் தளகர்த்தராக அண்ணன் அன்பழகன் அவர்கள் மக்கள் பணியாற்றி இன்னுயிர் ஈந்திருக்கிறார்.
கீழப்பழூர் சின்னசாமி தீக்குளித்து, தமிழ்மக்களுக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தினார். நீட் தேர்வின் பாதிப்பை உணர்த்த, அனிதா உயிர் துறந்தார். கொரோனாவின் பாதிப்பை மக்களுக்கு உணர்த்த, ஒரு மக்கள் பிரதிநிதி தன் உயிரைக் கொடுத்தது போல் ஆகி விட்டது.
இருப்பிலும், இறப்பிலும் அண்ணன் அன்பழகன், தான் ஓர் செயல்வீரர் என்பதை நிலை நிறுத்தி விடை பெற்றுள்ளார்.
இன்று அண்ணன் அன்புக்கு 62 ஆம் பிறந்தநாளாம்.
மக்கள் பணியாற்றும் போது மரணம். அதிலும், கொடிய கொரோனாவை எதிர்த்து போராடி மரணம். கழக வரலாற்றில் உன் இடம் தவிர்க்க முடியாதது அண்ணா.
# கண்ணீரோடு விடை தருகிறோம் அன்பு அண்ணா...
_எஸ்.எஸ்.சிவசங்கர்

கருத்துகள் இல்லை: